கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மாத்திரகளைப் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும், கரோனா தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது. அதையடுத்து மார்ச் 25ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
என்னதான் கடுமையான உத்தரவுகளைப் போட்டாலும், தாக்கத்தை உணராத மக்கள் பொறுப்பின்றி வெளியில் நடமாடுகின்றனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல் என்று காவல்துறை நடவடிக்கை ஒருபுறம் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பொதுவெளியில் வாகன ஓட்டிகள் தேவையின்றி நடமாடுவதைத் தவிர்க்க, சேலம் மாநகர காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை (ஏப். 9) முதல் அமல்படுத்தி உள்ளனர்.
காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கியத் தேவைக்காக வாகனங்களில் வருவோர், இனி வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வெளியே வர முடியும். அதேநேரம், ஐந்து நாள்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளும்படியும் மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒருவர் எத்தனை முறை வாகனங்களில் பொதுவெளியில் சுற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள, வாகனங்களின் பதிவெண் பலகையில் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு நிறத்தினாலான வண்ணத்தை காவல்துறையினர் பூசுகின்றனர்.
அதாவது, ஒருவர் முதல்முறையாக வெள்ளிக்கிழமையன்று வாகனத்தில் வருகிறார் எனில் அவருடைய பதிவெண் பலகையில் சிவப்பு வண்ணத்தில் ஒரு கோடு போடப்படும். அவர் மறுபடியும் திங்கள் கிழமையன்று இரண்டாவது முறையாகப் பொதுவெளியில் வாகனங்களை எடுத்துக்கொண்டு வர அனுமதிக்கப்படுவர்.
சனிக்கிழமையன்று வரும் வாகனங்களில் மஞ்சள் வண்ணத்தில் கோடு போடப்படும். அவர் இரண்டாவது முறையாகச் செவ்வாய்க்கிழமை மட்டுமே வெளியில் வாகனங்களில் நடமாடலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் வாகனங்களின் பதிவெண் பலகையில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும். அவர்கள் இரண்டாவது முறை புதன்கிழமை அனுமதிக்கப்படுவர்.
இந்த மூன்று வண்ணங்களும் பூசப்படாத வாகனங்கள் மட்டும் வியாழக்கிழமை அனுமதிக்கப்படும். அன்று வரும் வாகனங்களில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும்.அந்த வாகனங்கள் இரண்டாவது முறையாக ஞாயிறு அல்லது புதன்கிழமைகளில் அனுமதிக்கப்படும்.
அனுமதிகப்படாத நாள்களில், அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த உத்தரவு, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், மருத்துவமனை உள்ளிட்ட தவிர்க்க இயலாத தேவைகளுக்காக வாகனங்களில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.