தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல், பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான கரிநாள் என்று சொல்லப்படும் காணும்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடும் திருநாளாக மக்கள் கொண்டாடுகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமம். இந்த கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயக் தொழிலாளர்கள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு பண்டிகை கொண்டாட தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அதன்படி நேற்று அத்தியூர் ஆட்டுச் சந்தை களைகட்டியது. ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். ஒரு ஆடு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. இதேபோன்று நேற்று மட்டும் பத்தாயிரம் ஆடுகள் சுமார் 10 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளன.
ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் இது பெருத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 கோடி. ஒரே நாள் சந்தையில் இவ்வளவு பணம் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.