தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஒருவாரமாக அநேக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. முக்கிய இடங்களில் தேங்கிய மழை நீரால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று (14.11.2021) பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை குறித்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.