புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு உள்ஒதுக்கீட்டின் மூலம் 18 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார்கள். கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று ஆங்கில வகுப்புகளை கவனிக்கத் தடுமாறக் கூடாது என்பதற்காக கீரமங்கலத்தில் ‘நமது நண்பர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் கீரமங்கலம், மாங்காடு, மறமடக்கி, தாந்தாணி, அரிமளம், மழையூர், பேராவூரணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 12 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியாளர் குருகுலம் சிவநேசன் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் மூலம் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டனர். இந்நிலையில் 20ஆம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளது. அதனால் ஆங்கில பேச்சுப் பயிற்சி பெற்ற 12 மாணவர்களுக்கும் ‘நமது நண்பர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் பாராட்டு விழா மற்றும் வழியனுப்பு விழா கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் இணைப்புச் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களைப் பாராட்டினார்கள். வழக்கறிஞர் நெவளிநாதன் வரவேற்றார். கவிஞர் ஜீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார். மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசி விடைபெற்றனர்
தொடர்ந்து "ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வோம், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வோம், எங்களை நம்பும் கிராமப்புற மக்களை ஏமாற்ற மாட்டோம்" என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவில் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். நினைவுப் பரிசுகள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
தலைமையுரை ஆற்றிய அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம், “மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலம் ஒரு தடையாக உள்ளது. என் மகள் மருத்துவம் படிக்கச் சென்று ஆங்கிலம் தடையாக இருந்ததால், தொடர மாட்டேன் என்றார். ஆனால் வகுப்புகளைக் கவனித்து வா தேர்வு எழுத வேண்டாம் என்று தைரியம் கொடுத்தேன். அதன்பிறகு வகுப்புகளைக் கவனித்ததுடன் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால் நீங்கள் அடிப்படையிலேயே ஆங்கிலத்தை எளிமையாக கற்று சிறப்பாக பேசியது எனக்கு பெருமையாக உள்ளது. தன்னம்பிக்கையுள்ள உங்களால் சாதிக்க முடியும். பள்ளிகளைப் போல புத்தகமாக அச்சிடப்பட்டதை மட்டும் படிக்காமல் தேடல்கள் இருக்க வேண்டும். படித்து முடித்து உங்கள் கிராமத்தில் நீங்க சேவை செய்ய வேண்டும்.” என்றார்.
கவிஞர் ஜீவி பேசும் போது, “கிராமத்துப் பிள்ளைகளாலும் சாதிக்க முடியும் என்று வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறீர்கள். நிச்சயம் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர முடிகிறது. உங்களால் உங்கள் பெற்றோரும் கிராமத்தினரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அவர்கள் கார்டை தேய்த்து உங்கள் படிப்புக்குப் பணம் கொடுக்கவில்லை, முதுகெலும்பை தேய்த்துக் கொண்டு பணம் செலவளிக்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் உயர்ந்தவர்களாக, மக்களின் மருத்துவர்களாக வரும்போதுதான் நீங்களும் சிறப்பு விருந்தினராக வர முடியும்” என்றார். பின்னர் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.