கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரைத் தர முடியாது; மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது இல்லத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான நீரைக் கர்நாடகா விரைந்து திறந்து விட அறிவுறுத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் இது குறித்து தெரிவிக்கையில், “மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஆசை இருக்கலாம். ஆனால் மேகதாதுவில் அணைகட்ட உரிமை கிடையாது. மேகதாதுவில் அணையைக் கட்டக்கூடாது என சொல்வதற்குத் தமிழகத்திற்கு உரிமை உண்டு. காரணம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கபினிக்கு கீழ் பில்லிகுண்டுலு வரை இயற்கையான தண்ணீர் செல்லும் இடத்தில் அணை கட்டுவது உகந்தது அல்ல. மத்திய நீர் ஆணையம் அனுமதி கொடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும். வனத்துறை அனுமதி கொடுக்க வேண்டும். இதையும் மீறி கட்டினால் நீதிமன்றம் செல்லுவோம். அணை கட்டுவது நடக்காது. அணையைக் கட்ட விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.