குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை நிறுத்தப்பட்டால் அவரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்ததும் இதற்கான ஏற்பாடுகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது என்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், பலரும் இந்த தகவலை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வி.சி.க எம்.பி ரவிக்குமார், "தமிழிசை ஒருவேளை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஏற்க மாட்டோம். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக அல்லாத வேறு ஒரு நல்ல வேட்பாளரை தமிழக முதல்வர் குடியரசு தலைவர் தேர்தலில் முன்மொழிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.