கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும் அப்படிக் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் குழு தலைவரிடமும் அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திகைக்க வைத்து வருகிறார்கள். அதன்படி நேற்று கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு தலைவர் மேனகா விஜயகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணைச் சேர்மன் முனுசாமி, ஒன்றிய ஆணையர் இந்திராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட குழு உறுப்பினர் அதிமுக-வை சேர்ந்த மான்விழி பேசும்போது குழு உறுப்பினர்களின் பகுதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். சுயேட்சை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்பு அதிகாரி கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டபோது ரூபாய் 70 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை தற்போது ஒன்றிய பொது நிதியில் இருந்ததை மாவட்ட ஆட்சியர் நிதிக்கு அனுப்பக் கூடாது என்று ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கூறினோம். எங்களின் அனுமதி இல்லாமல் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 70 லட்சத்தை ஆட்சியர் பொதுநிதி அதிகாரிகள் அளித்துள்ளனர். ஏன் இப்படி நடந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த ஒன்றிய ஆணையர் இந்திராதேவி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதால் அந்த நிதி அனுப்பி வைக்கப்பட்டது என்றார். இதற்கு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் நிதிக்கு மாற்றப்பட்ட 70 லட்சத்தை மீண்டும் ஒன்றிய பொது நிதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இல்லையென்றால் அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று கூறிய சிவ சுப்பிரமணியன் அதற்கு அச்சாரமாக நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் வெளிநடப்பு செய்தார். அவரது கருத்துக்கு ஆதரவாகக் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் அவருடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கம்மாபுரத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.