மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் இனி சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று இன்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர் சேம.நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செங்கல்சூளை அமைத்துக் கொள்ளச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது, நீதிமன்ற ஆணையும் பெற்றிருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் மண் எடுக்க அனுமதிக்காமல் அலைக்கழித்து வந்தனர்.
இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்தனர். தி.மு.க ஆட்சி வந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்து நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எங்களின் கருத்தை நன்கு கேட்டறிந்த பின் நான் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுக்கிறேன் என்று கூறினார். இதேபோன்று முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் அவர்களையும் நேரில் சந்தித்துப் பேசி மனு அளித்தேன். அவரும் இதற்கு உரியத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். எங்களின் நியாயமானக் கோரிக்கையைத் தாயுள்ளதோடு பரிசீலித்த முதலமைச்சர் அவர்கள் பாப்பிரெட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மண்பாண்டம் தயாரிக்கவும், செங்கல் சூளைகளுக்கும் மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்று கவனயீர்ப்பில் கூறினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்ப்பாசனம் மற்றும் கனிமளவத்துறை அமைச்சர் துரைமுருகன், நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் எனச் சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனக் கடந்த ஜூலை 30ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் விவசாயத்திற்கு மண் எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் உத்தரவுப்படி தமிழக அரசு ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி 1.5 மீட்டர்க்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைப்பவர்கள் விவசாயிகள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். எங்களின் பல வருடக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து ஆட்சிக்கு வந்த 125 நாட்களிலே எந்தவித சான்றிதழ் பெறாமலேயே மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்த முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.