Skip to main content

நம் மீது திட்டமிட்ட திணிக்கப்பட்டுள்ள இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
thiruma


நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவி ப்ரதீபா உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.

தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவி ப்ரதீபா உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்ற தொடங்கினார்.

நீட் தேர்வு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் உயிர்பலிகளை வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் அனிதா என்றால் இந்த ஆண்டு ப்ரதீபா, ஜதராபாத்தில் ஒரு மாணவி, டெல்லியில் ஒரு மாணவர் என தொடர்ச்சியாக மாணவர்கள் இறந்து வருகிறார்கள். நம் மீது திட்டமிட்ட திணிக்கப்பட்டுள்ள இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

நம்மிடம் நீட் தேர்வை திணிக்கும் போது மருத்துவக்கல்வி கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் ஊழல் பெருக்கெடுக்கிறது. இதை சரி செய்யவே நீட் கொண்டு வந்து குறைந்த கட்டணத்தில் கல்வியை தரப்போகிறோம் என்றார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? தற்போது மருத்துவ கல்வி கட்டணம் பல லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் கருப்பு பணங்களாக இருந்தது தற்போது சட்டப்பூர்வமாக வெள்ளையாக்கப்பட்டது. கடந்த காலத்தில் வாங்கப்பட்ட தொகை, தற்போதும் வாங்கப்படுகிறது. நம்மை நம்ப வைத்து மோசடி செய்தது இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கம். இந்த மோடி அரசாங்கத்தின் காரணமாகவே, எடுபிடியாகவே எடப்பாடி அரசாங்கம் உள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதா குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படாமல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. இதை வலியுறுத்தி கேட்க வேண்டிய தமிழக அரசு மோடியிடம் மண்டியிட்டு கேட்டுள்ளது. இதனாலே நாம் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளைகளை இழந்து வருகிறோம்.

மருத்துவப்படிப்பு என்பது ஒரு பெரிய அதிகாரம் உள்ள படிப்பு அல்ல. ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் போன்று அதிகாரமுள்ள பதவி என்றால் கூட மாணவர்கள் மனவேதனை அடைவதை ஏற்றுக்கொள்ளலாம். எம்.பி.பி.எஸ் படிப்பு மிக சாதாரண படிப்பு தான். அதற்கு மேல் உள்ள படிப்பால் மட்டுமே மருத்துவ படிப்புக்கு மரியாதை. அதனால் நம் பிள்ளைகளை அதிகாரமுள்ள படிப்புகளுக்கு தேர்வுகளை எழுத சொல்லவேண்டும். நம் பிள்ளைகள் ஒன்றும் திறமையற்றவர்கள் அல்ல.

நீட், ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளுக்கே நம் பிள்ளைகள் மோதும் போது, ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளில் சாதராணமாக வெற்றி பெறுவார்கள். அதனால் நம் பிள்ளைகளை மனதைரியத்துடன் வளர்க்க வேண்டும். ப்ரதீபா இறப்பை கேட்டதும் தோழமை கட்சியான திமுக உடனடியாக சட்டமன்றத்தில் செயல்பட்டது. இதேபோல் ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து இதில் அடுத்து என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டது போல இறந்த ப்ரதீபாவின் குடும்பத்ததிற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். சி.பி.எம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வில் குளறுபடி எற்பட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ வாரியத்துக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளனர். அப்படியானால் அவர்கள் எந்த சட்டத்தையும் மதிக்கமாட்டோம் என கூறுவதாக தெரிகிறது.

இது பற்றி நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லவும், இறந்த ப்ரதீபா உடலை வைத்து எங்களால் தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முடியும். ஆனால் இந்த கையாளாகாத அரசு எந்த கோரிக்கையும் நிறைவேற்றாது என்பதால் நாங்கள் உடலை நல்லடக்கம் செய்கிறோம். ஆனால் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தொடர்ந்து வலிறுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருமாவளவனின் உரையை அடுத்து, மாணவி ப்ரதீபாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்