Skip to main content

“வறுமையில் வாடும் எங்களுக்கு நிவாரண தொகை வழங்குக” - விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021
We must find a way to provide relief to those living in poverty - Power Loom workers demand!

 

மனித குலத்திற்குப் பேரழிவையும், உயிரைப் பற்றிய மிகப் பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், எப்போது இந்த பூமியிலிருந்து துரத்தப்படுமோ என்ற ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது உழைக்கும் வர்க்கம். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தொடர் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையுடன் வாடும் சூழல் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. 

 

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 50 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா என பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களிலிருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது முழுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த 45  நாட்களுக்கு மேலாக வெளிமாநிலங்களுக்கு உற்பத்தியான ஜவுளிகளை அனுப்ப முடியாமல் ரூபாய் 500 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்ற மாதம் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

 

We must find a way to provide relief to those living in poverty - Power Loom workers demand!

 

இதனால்,  விசைத்தறி உற்பத்தி பாதி அளவாகக்  குறைக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி இயங்கியது. இதனால் நாளொன்றுக்கு 50 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியான இடத்தில் 20 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடந்த 6ஆம் தேதி முதல் முழு உற்பத்தியையும் நிறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சென்ற 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் விசைத்தறிகள் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாமல் மூடப்பட்டுள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 15 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள ஒரு லட்சம்  தொழிலாளர் குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து, அதாவது ஏறக்குறைய ஏழு லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

 

அதேபோல்,  மடி தொழிலாளர்கள், வேட்டி, லுங்கி, சேலைகள், காடாத்துணிகளை மடிக்கும் தொழிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். அன்றாடக் கூலி அடிப்படையில் பணி மேற்கொள்ளும் அவர்களுக்குத் துணி உற்பத்தி இருந்தால் மட்டுமே வேலை இருக்கும். சென்ற ஆண்டு கரோனா ஊரடங்கால் இந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடினார்கள். இப்போதும் முழு ஊரடங்கு துவங்கியதாலும், துணி உற்பத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டதாலும், வேலைவாய்ப்பை முழுமையாக இழந்துள்ளனர். இதனால், வீட்டு வாடகை, உணவுப் பொருட்கள் வாங்கக் கூட முடியாமல் தவித்து வருவதாகக் கூறும் இவர்கள் அரசு தங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்