திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, நகர்மன்றத் தலைவராக திருமலைசாமியும், துணைத் தலைவராக வெள்ளைச் சாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை நகராட்சி ஆணையாளர் தேவிகா அறிமுகம் செய்து வைத்தார். வெற்றி பெற்றவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வாழ்த்தினார்.
அதன்பின் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திமுக ஆட்சி அமைந்து தேர்தல் வாக்குறுதி அளித்த ஒவ்வொரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை விரிவாக்கம், மின்மயானம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தற்பொழுது ஒட்டன்சத்திரம் நகராட்சியின் நீண்டநாள் பிரச்சனையான குப்பை கொட்டும் இடம் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக 20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, ரூ.8 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ரூ.1030 கோடி செலவில் பரம்பிக்குளம், ஆழியாற்றிலிருந்து குடிநீர் திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நகர் பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினந்தோறும் 130 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, மக்கள் மனதை வெல்ல வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.