Skip to main content

கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்...! -அ.தி.மு.க.தோழமை கட்சி அறிவிப்பு!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020
We have left the alliance ...! - AIADMK Comrade Party Announcement!


ஈரோடு சுல்தான் பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா 22 ந் தேதி  நடந்தது. மாவட்ட செயலாளர் சபீக் அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில பொதுசெயலாளரும், நாகபட்டினம் தொகுதி எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகம் முழுவதும் ம.ஜ.க. கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை, கிளை நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் டிச.31ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும். கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அடுத்த மாத இறுதியில் தலைமை செயற்குழு கூடி முடிவு செய்யும். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை குறித்து சட்டசபையில் நானும், எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதன் விளைவாகவே பேரறிவாளன் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து செல்ல முடிந்தது. ஏழு பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளனர். சி.பி.ஐ.யும் கருத்து தெரிவித்துள்ளது. அதன் பின்னரும் 7 பேர் விடுதலையில் கவர்னர் கள்ளமவுனம் அனுஷ்டிப்பதாக குற்றம் சாட்டுகிறோம். விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்துவது அநீதியாகும்.தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இதுபற்றி தமிழக முதல்வர் பேச வேண்டும்.

பா.ஜ.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து கொண்டதால் கடந்த லோக்சபா தேர்தலின் போதே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். கடந்த இரு மாதங்களாக அ,தி.மு.க.–பா.ஜ. இடையே பிணக்கு இருந்தது போல் காணப்பட்டு, தற்போது கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இது எதிர்பார்த்தது தான். தமிழகம் சமூக நீதியின் தாயகம். இங்கு வட இந்திய கலாச்சாரத்தை திணிக்க முயன்றால் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து கொண்டதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டும். இது தமிழக நலனுக்கு நல்லதல்ல. மகாராஷ்டிராவில் கொள்கை பங்காளியான சிவசேனா கட்சியையும், ஐக்கிய ஜனதா தளத்தை பீகாரிலும் பாஜவினர் வீழ்த்தியுள்ளனர். இதேநிலை தான் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் என எண்ணுகின்றோம். தேர்தலில் நாங்கள் எத்தனை இடங்களில் போட்டி, கூட்டணி விவகாரத்தை கட்சியின் தலைமை செயற்குழு தான் முடிவு செய்யும்.

ரஜினி தனிமை, ஆன்மிகம், அமைதியான சூழலை விரும்புவார். அரசியல் எப்போதும் நெருக்கடி, பரபரப்பு, அழுத்தம் நிறைந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஆட்படுத்தி கொள்ள மறுப்பதாக நினைககிறேன். அரசியலுக்கு வருவதில் அவருக்குள் உடன்பாடு இல்லை என்றே நினைக்கிறேன். இது அவரது அறிக்கை, நடவடிக்கைகள்களில் தெரியவருகிறது. அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் தான்.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை மக்கள் கருத்தை பெற்று திறக்க வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தான், அரசியலில் சூழலில் மாற்றங்களாக, ஏமாற்றங்களா என்பது தெரிய வரும். வேல் யாத்திரை குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுககீடு வரவேற்கத்தக்கது. ஆனால், அதனை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை தேவையற்றது. அரசியல் நோக்கத்துக்காக கைது செய்ய கூடாது."  என அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்