மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நான்கரை லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கியது அ.தி.மு.க. அரசு. சொத்து வரியை 150% உயர்த்தியுள்ளது தி.மு.க. அரசு. தமிழகத்தில் மின் கட்டணத்தையும் 53 சதவீதம் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தை விட பல மாநிலங்கள் குறைந்த மின் கட்டணத்தையே வசூலிக்கின்றன.
சொத்து வரி, மின் கட்டண உயர்வு என வாக்களித்த மக்களுக்கு இரண்டு போனஸ் வழங்கியுள்ளது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி, ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ஏராளமான திட்டங்களை தந்துள்ளோம். மதுரை தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீரைத் தேங்கச் செய்தது அ.தி.மு.க. அரசு. மதுரையில் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு, 925 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் கொண்டு வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.