நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், திட்டக்குடி, பெண்ணாடம், ஆகிய இடங்களில் ஒரே நாளில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான சி.வி. கணேசன் நடத்தி அசத்தியுள்ளார். ஒவ்வொரு முகாமிலும் காலையிலிருந்தே அதிகாரிகள் அங்கு வரும் மக்களிடம் மனுக்களைப் பெற்று பெட்டியில் போடுவதற்கு பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அந்த மனுக்களை அந்த பெட்டியில் கொண்டு வந்து போட்டுக்கொண்டிருந்தனர்.
நெல்லிக்குப்பத்தில் 12 மணி அளவில், பண்ருட்டியில் 2 மணி அளவில், விருத்தாசலத்தில் 3மணி அளவில், பெண்ணாடத்தில் 4 மணி அளவில், திட்டக்குடியில் கடைசி என ஐந்து இடங்களில் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்கு என்று தனியாக பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. மனு கொடுக்க வந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை அந்தப் பெட்டியில் சேகரித்தனர். இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் துறை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், கூடுதல் ஆட்சியர் பவன்குமார், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். திட்டக்குடி முகாமில் பேசிய அமைச்சர், " தமிழக முதல்வர் பதவியேற்று 100 நாட்களில் 1200 திட்டங்களை நிறைவேற்றி உள்ள ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் இந்தியாவிலேயே விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் தான். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். முதல்வர். ஆனால் தற்போது பெறப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளேன்.
அவர்களும் உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக சிறந்து விளங்கும் தமிழகத்தை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு. மேலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்" என பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.