சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கை, நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர், ''முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில் இரண்டு ஓடுதளங்கள் அமைய இருப்பதாக வரைபடத்தை கட்டினார்கள். அந்த இரண்டு ஓடுதளங்களுக்கு நடுவில் ஒரு ஓடை வருகிறது. அந்த ஓடையானது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அத்தனை ஏரிகளுடைய வெள்ளநீர், அதாவது நீர் நிரம்பிய பிறகு கலங்கள் என்ற பகுதியில் வெளியேறக்கூடிய அதிகப்படியான நீரானது அந்த ஓடை வழியாக ஓடி எந்த விதமான தடையும் இல்லாமல் கொசஸ்தலையாற்றில் கலக்கிறது. அந்த ஓடையானது வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கியமான ஓடை. இந்த விமானநிலைய திட்டத்தால் தடைப்பட்டு, ஒரு காம்பவுண்ட் சுவரோ அல்லது கட்டிடங்களோ கட்டி தடுக்கப்படும் பொழுது பக்கத்து கிராமங்கள் ஏறக்குறைய 30 கிராமங்கள் அழிவை நோக்கிச் செல்லும். வேளாண்மை விவசாயம் பாதிக்கும். சென்னைக்கு கூட அதனால் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படும் என்று பலவகையில் விவரங்களை அடுக்கினோம். இத்தனை விவரங்களையும் உள்வாங்கிய அமைச்சர்கள் முதல்வரிடம் இதை நேரிலே தெரிவித்து நீங்கள் கேட்கின்ற ஒரு நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என்று சொன்னார்கள். ஆனால் மூன்று மாதங்கள் நாங்கள் காத்திருந்தோம். எந்தவிதமான முடிவும் அரசு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் உலகளாவிய குளோபல் டெண்டர் அதாவது கள ஆய்வு, பொருளாதார ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளை நடத்துவதற்காக குளோபல் டெண்டரை அறிவித்து, இருபதாம் தேதி அதற்கான கூட்டங்கள் அரசு சார்பில் நடைபெற்றுள்ளது. அந்த டெண்டர் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததனால் நாங்கள் மீண்டும் அரசின் கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்களின் சார்பில் பேரணியை நடத்தினோம்.
ஆனால் வருவாய் கோட்டாட்சியரும், காவல்துறை தரப்பினரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று எங்கள் பேரணியைத் தடை செய்து இந்த பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று மூன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தக் கூட்டத்தில் நாங்கள் மீண்டும் எங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தோம். அங்கு விமான நிலையம் திட்டம் வந்தால் ஏற்கனவே தெரிவித்த பாதிப்புகளோடு புதிய கருத்தாக பக்கத்திலே அரக்கோணம் கடற்படை விமான தளம் அதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமான நிலையத்தால் பாதிக்கப்படும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். வடகிழக்குப் பருவ மழையால் அந்த ஓடை பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மாணவன் இறந்த நிலையில் மூன்று நாட்களாக சடலம் கிடைக்காமல் அண்மையில் தான் சடலம் கிடைக்கப்பெற்றது என்றோம்.
அமைச்சர்கள் சார்பில், குளோபல் டெண்டர் நோக்கமே இந்த இடத்தில் வேளாண்மை நிலங்கள் இருக்கிறது; விவசாய நிலங்கள் இருக்கிறது; குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இந்நிலையில் செய்யப்படும் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கின்ற கோரிக்கைகள் குறித்து ஆராயச் சொல்லி இருக்கிறோம். அத்தனை முடிவுகளும் வந்த பிறகுதான் நாங்கள் தெளிவான முடிவை எடுப்போம். அதுவரை நீங்கள் காத்திருங்கள். வேறு எந்த விதமான முடிவுக்கும் நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் பயப்பட வேண்டாம், அச்சப்பட வேண்டாம். விமான நிலையம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவது இந்த ஆய்வுக்குப் பிறகுதான். இப்போது அல்ல. அதனால் நீங்கள் அச்சப்படாமல் காத்திருங்கள். அந்த டெஸ்ட்டிற்காக வரக்கூடிய வல்லுநர்களை நாங்கள் கள ஆய்வு செய்ய அழைத்து வரும்போது உங்களுக்கு அறிவிப்போம். அப்பொழுது உங்கள் போராட்டக் குழு சார்பில் எங்களிடம் கொடுத்த அத்தனை தரவுகளையும் அங்கு தாருங்கள் என்று சொன்னார்கள்'' என்றார்.