கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. நேற்று இரவு மதுரையிலும் அதேபோல் குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் ''பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அரசின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.