கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை (22). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மணிமேகலை, பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பாலமுருகன். அதன்பின் ஓராண்டாக பாலமுருகனை காணவில்லை.
இது தொடர்பாக அவரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பெயரில், போலீசார் கடந்த ஓராண்டாக பாலமுருகன் பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் பாலமுருகனின் சொந்த ஊரரான ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (26) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
மணிகண்டனுக்கும், மணிமேகலைக்கும் இருந்த தகாத உறவை உறுதிப்படுத்திய போலீசார், மாயமான பாலமுருகன் விவகாரத்தில் இவர்களுக்கு உண்மை தெரியும் என்று கருதி அதன் அடிப்படையில் மணிமேகலையும் அவரது தகாத உறவினர் மணிகண்டனையும் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பாலமுருகனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதற்கு உடந்தையாக மணிகண்டனின் அண்ணன் தனசேகர் என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மணிமேகலை, மணிகண்டன், தனசேகர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ”பாலமுருகன் மனைவிக்கும் எனக்கும் முறை தவறிய உறவு இருந்து வந்தது. இது ஓரளவு பாலமுருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். மணிமேகலையைப் பார்க்கச் சென்ற பாலமுருகன் மணிமேகலைக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்துவிட்டு அந்த குழந்தை எனது சாயலில் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் வைத்தே மனைவி மணிமேகலையிடம் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார்.
அங்கிருந்து பாலமுருகன் சென்றுவிட்ட பிறகு இதுபற்றி மணிமேகலை எனக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தார். இனிமேல் பாலமுருகன் உயிரோடு இருந்தால் எங்கள் இருவருக்குமான தகாத உறவிற்கு இடையூறாக இருப்பார். அதனால் அவரது கதையை முடித்துவிட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். அதன்படி அன்றைய தினம் இரவு பாலமுருகன் வீட்டுக்குத் திரும்பி வந்ததை கண்காணித்துக் கொண்டு இருந்தேன். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து நானும், அவரது வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டேன். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டோம். அதில் பாலமுருகன் தலையை நான் சுவரில் பிடித்து மோதினேன். பின்னர் அங்கிருந்த பித்தளை தவளையினால் அடித்தும் சுத்தியலால் தாக்கியும் அவரை கொலை செய்தேன்.
அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு எனது அண்ணன் தனசேகரனிடம் விவரம் தெரிவித்து இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டமிட்டோம். ஒரு சாக்கு பைக்குள் பாலமுருகன் உடலை வைத்து மூட்டையாகக் கட்டி மோட்டார் சைக்கிளில் நல்லாத்தூர் அருகே உள்ள வாய்க்காலுக்கு கொண்டு சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்குச் சென்றதும், பாலமுருகன் உடலை தீ வைத்து எரித்து சாம்பல் ஆக்கினோம். அந்தச் சாம்பலை அருகே உள்ள ஆற்று நீரில் கரைத்து விட்டோம்.
மேலும் உடல் எரிந்த பிறகும் அங்கு கிடந்த அவரது எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகளை பெரிய கற்களைக் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி தூள் ஆக்கினோம். அதையும் அள்ளிச் சென்று ஆற்றில் வீசி விட்டோம். பாலமுருகன் வீட்டில் நடந்த சண்டையால் அங்கு வழிந்த ரத்தம் போன்ற தடயங்களையும் சுத்தமாக அழித்துவிட்டோம். இதையடுத்து எதுவும் தெரியாதது போன்று இதுநாள்வரை ஊரில் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அதேநேரம் எனக்கும் பாலமுருகன் மனைவி மணிமேகலைக்கும் உள்ள தகாத உறவிற்கு எந்த இடையூறுகளும் இல்லாமல் இருந்துவந்தோம். இந்தச் சூழ்நிலையில்தான் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
கொத்தனார் பாலமுருகன் மாயமாகி ஓராண்டுக்கு மேலான நிலையில் தற்போது அவர் மனைவி, அவரது தகாத உறவினர் மணிகண்டன், அவரது அண்ணன் தனசேகரன் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்து அவரது உடலை அடையாளம் தெரியாத அளவில் செய்துள்ள கொடூர செயலைக் கண்டு அப்பகுதியில் உள்ள சுத்துப்பட்டு கிராமமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.