!['We are suffering from the loss of a valuable model people's representative' - MK Stalin's condolence](http://image.nakkheeran.in/cdn/farfuture/cOUyuXjNqsXflUyhtqvLC-Wnr9sHEwDYBrUg_LnV56w/1635427321/sites/default/files/inline-images/z117_1.jpg)
மதுரையின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. நன்மாறன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த புதன் கிழமை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் (74) இன்று மாலை உயிரிழந்தார். அவருக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்த நிலையில். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2001 முதல் 2011 ஆம் ஆண்டுவரை இருமுறை மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நன்மாறன் இருந்துள்ளார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்த நன்மாறன் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார். மதுரையில் அனைத்து தரப்பினரின் அன்பையும் பெற்றவர் நன்மாறன். மேடைக் கலைவாணர் என்ற அடைமொழியுடன் போற்றப்பட்ட நன்மாறனின் மறைவு அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/jsKW80E7txAykBB9mM6F91TPfa5awjSS1YtKS5peiO0/1635427544/sites/default/files/inline-images/z119_0.jpg)
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'ஏழை எளிய மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்தவர் நன்மாறன். இன்றைய தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஒரு மதிப்புமிக்க மாதிரி மக்கள் பிரதிநிதியை இழந்து தவிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.