நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு அதிமுக காணாமல் போய்விடும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் கடலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், 'இன்றைக்கு மதுரையில் பாஜக கட்சியை சேர்ந்த பொதுச்செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அவர் பெயர் ராம சீனிவாசன். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றி, கட்சியை பற்றி பேசுகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடுமாம். கண்டுபிடித்துக் கொடு நீ... உன்னை போல எத்தனை பேரை பார்த்தவர்கள் அதிமுககாரர்கள். அதிமுகவின் வரலாறு உனக்கு தெரியுமா? நான் உட்பட மேடையில் இருக்கின்ற அத்தனை பேரும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் இந்த கட்சிக்கு உழைத்தவர்கள்.
உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உழைப்பை நம்பி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய கட்சி நடத்துகிறோம். உங்களை போல வெட்டி விளம்பரத்தில் நாங்கள் அரசியல் நடத்தவில்லை. 30 ஆண்டுகால மக்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்து இன்று மக்களுடைய ஆதரவைப் பெற்று தமிழகத்தில் அதிக தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
எங்களைப் பார்த்து 2024க்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறீர்களா? பொறுத்திருந்து பாரு இந்த தேர்தலோடு உன்னை போல் வெட்டி அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இந்த தேர்தலோடு அடையாளம் காணாமல் போய்விடுவார்கள். இதுதான் எதார்த்தம். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். அப்பொழுதுதான் பாஜகவுடன் கூட்டணி வைச்சோம். அப்பொழுதுதான் தாமரை சின்னம் என மக்களுக்கே அடையாளம் காட்டியது ஜெயலலிதா. உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டுச்சு எங்களைப் பார்த்தா அடையாளம் காணாமல் போய்விடும் என்று சொல்கிறீர்கள்'' என ஆவேசமாக பேசினார்.