பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் ஆவணப்படம் 'காளி'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலையை கண்டித்து நெல்லையில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் ''இன்னைக்கு வரைக்கும் அவரை (லீனா மணிமேகலையை) கைது செய்வதற்கு தெம்பு இல்லாத... தைரியம் இல்லாத... போலீசார். என்னங்க கொடுமை இது'' என்றதோடு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஹரிஹரன் பேசிக்கொண்டிருந்த பெரியவரின் பேச்சால் பொறுமை இழந்து அவரிடம் சென்று, ''தொந்தரவுக்கு மன்னிக்கவும், காவல்துறை என்பது தமிழ்நாடு முழுக்க ஒட்டுமொத்தமாக குறிக்கும்
திருப்பூருக்கு தனி காவல்துறை திருநெல்வேலிக்கு தனி காவல்துறை கிடையாது. நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கு, குடும்பம் குழந்தைகள், பொண்டாட்டி, புள்ளைங்க, சொந்தக்காரன் எல்லாம் இருக்கிறார்கள். இப்படி பேசுறாங்க போலீசார் உப்பு சப்பு இல்லாம பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கமாட்டார்களா?. தயவு செய்து பொதுமக்கள் கேட்டும்படி நாகரீகமாக,கண்ணியமாக பேசுங்கள்'' எனக் கூறிவிட்டு கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.