கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் கடைக்கோடி கிராமங்கள் தனித் தீவாக மாறியிருக்கின்றன.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடக் கரையோரம் உள்ள மக்களுக்கு, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.
மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே இரண்டாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கடைக்கோடி பகுதிகளான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம், முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக வெள்ளைமணல் கிராமத்தில் 120 வீடுகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து தீவு கிராமமாக மாறியுள்ளது. அந்த பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் உட்புகுந்து வருகிறது. அதே போல முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்குள்ளவர்களை வருவாய்த் துறையினர் பாதுகாப்பு முகாமுக்கு அழைத்து செல்கின்றனர். அவர்கள், ஆடு மாடு உள்ளிட்ட தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.