தமிழ்நாட்டில் நீர்நிலைகளை மணல் திருடர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் தாரைவார்த்து கொடுத்துவிட்டதன் பலன் இன்று குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்துக்கிடக்கும் அவலநிலையில் உள்ளது தமிழகம்.
இந்த நிலையிலிருந்த தமிழகத்தை மீட்டெடுக்க இனியும் அரசாங்கங்களை நம்பினால் தண்ணீரின்றி நாவறண்டு சாகும் நிலைதான் வரும் என்பதை உணர்ந்த கிராமத்து இளைஞர்கள் சொந்த பணத்துடன களமிறங்கிவிட்டனர்.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் 2 பெரிய ஏரிகளையும் 15 கி.மீ வரத்து வாய்க்கால்களையும் ரூ 59 லட்சம் சொந்த செலவில் தூர்வாரி சீரமைத்து தண்ணீரை நிரப்பினார்கள் இளைஞர்கள்.
பலன் 250 அடிக்கு கீழே இருந்த நிலத்தடி நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. இதைப்பார்த்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களில் நீர்நிலை சீரமைப்பில் கிராம இளைஞர்கள் இறங்கினார்கள். கொத்தமங்கலத்தில் 7 பெரிய குளங்களை சீரமைத்த இளைஞர்கள் பல கி.மீ. நீளத்திற்கு வரத்து வாய்க்கால்களை சீரமைத்து கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு முதியவர்களும் பள்ளி மாணவர்களும் கூட தங்களது சேமிப்புகளை கொட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ள முகம் தெரியாத இளைஞர்களும் நீர்நிலை உயர தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அதே போல தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள சுமார் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரியை கைஃபா என்னும் இளைஞர் அமைப்பு தத்தெடுத்து மராமத்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் ஒட்டங்காடு கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக் குழு என்னும் இளைஞர் அமைப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அனைத்து இளைஞர்கள் குழுவிலும் பல்வேறு துறைகளில் பணியில் நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் தங்கள் பங்களிப்புடன் ஆர்வமுள்ள கொடையாளர்களின் பங்களிப்பையும் பெற்று நீர்நிலைகளை உயர்த்த கடும் வெயிலில் பாடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களை கேள்விப்பட்டு உயர்நீதீமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேரில் வந்து பார்த்து இளைஞர்களை பாராட்டியதுடன் நினைவாக மரக்கன்றுகளை நட்டு முழுநேரமும் நீர்நிலை காக்க உழைக்கும் இளைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்.
அதே போல தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பணிநடக்கும் குளங்களை பார்த்து வியந்து பாராட்டியதுடன் அவர்களுக்கு உதவும் வகையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்கவும் வருவாய்துறைக்கு உத்தரவிட்டதுடன் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
இந்த நிலையில்தான் ஒட்டங்காடு கிராமத்தில் குளம் தூர்வாரும் இடத்தில் நெல்லை உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஐ ஏ எஸ் தலைமையில் திரண்ட இளைஞர்கள் நிலத்தடி நீர், மேல்மட்ட நீரை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எழுந்தால் தண்ணீர் இல்லை என்ற நிலையை மாற்றலாம்.