Skip to main content

விவசாயிகளுக்கான நீர் பங்கீடு கல்வெட்டுகள்.. அரசர் கால நீர்மேலாண்மை தகவல்கள்...    

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

Water distribution inscriptions for farmers.  Water Management Information ...

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வாய்விடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர். எ.சுதாகர், வரலாற்று ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

 

வாய்விடாந்தாங்கல் காளியம்மன் கோவில் மானிய நிலம் எட்டி ஏரி அருகில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும், அதே ஊரில் ஏஜென்ட் என்பவருடைய நிலத்தில் உள்ள பாறையில் ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இரண்டும் விஜயநகர அரசர் குமார கம்பணன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டதாகும். இதில், எட்டி ஏரி அருகே உள்ள கல்வெட்டைப் படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், “இவ்வூரில் வாழ்ந்த கெங்கையாடி, அண்ணாமலை, வீரசிங்கதேவன், கூத்தாடும்பிச்சை, படுவூர் தோட்டி ஆகியோர் முடிவெடுத்து கல்வெட்டு வெட்டியுள்ளனர். அதன்படி வெட்டும்பிள்ளை ஏந்தல் பாசனத்தில் உள்ள கழனிக்கு, வாயலார் ஏந்தல் நீர் ஒரு குறிப்பிட்ட அளவு நிறுத்தி நல்லன் செறு நிலத்திற்குப் பாய ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு மேல்வரும் நீரை வெளியேற்றிவிடவும் முடிவு செய்ததாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இது நீர்பாசனத்தை ஒழுங்குபடுத்தும் தகவலைத் தரும் அரிய கல்வெட்டு” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Water distribution inscriptions for farmers.  Water Management Information ...

 

சக ஆண்டு 1279 (பொது ஆண்டு 1357) இல் வெட்டப்பட்ட மற்றொரு கல்வெட்டில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாட்டு கீழ்பற்றில் உள்ள படுவூரில், திருவண்ணாமலையில் உள்ள அணி அண்ணாமலை கோவில் திருப்பணிக்கு 100 குழி நிலம் இறையிலியாக விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், அணி அண்ணாமலை பரையன் ஏந்தல் என்ற நீர்நிலையையும் வெட்டுவித்து, அந்நிலத்தில் நத்தம் நிலத்தை ஏற்படுத்தி, குடியும் ஏற்றி, ஏரியும் வெட்டுவித்து, கிணறும் ஆழப்படுத்திக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் தற்போது வாய்விடாந்தாங்கல் என்று அழைக்கப்படும் ஊரின் பெயர் வாயுளான் ஏந்தல் என்றும், அரசந்தாங்கல் என்று அழைக்கப்படும் ஊர் அரசுரடையான் ஏந்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Water distribution inscriptions for farmers.  Water Management Information ...

 

இக்கல்வெட்டுகளில் நீரைப் பயன்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளும் அதனை மேலாண்மை செய்வது பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் பாறையில் உள்ள கல்வெட்டில் திருவண்ணாமலையைக் குறிக்க முக்கோணம் போன்ற குறியீடும் வெட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற குறியீடு உள்ள பல கல்வெட்டுகள் தொடர்ந்து இந்த ஆய்வு நடுவத்தால் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் இக்கல்வெட்டுகள் விஜயநகர காலத்திய நீர்மேலாண்மைக்கு தக்க சான்றுகள் என்றும் செயலர் ச.பாலமுருகன் குறிப்பிட்டார்.

 

சார்ந்த செய்திகள்