அரசாங்கங்களால் நீண்ட காலமாக பராமரிப்பின்றி விடப்பட்ட நீர் நிலைகளால் வறட்சி தாண்டமாடி வருகிறது. இனியும் அரசுகளை நம்பி பயனில்லை என்ற நிலையில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளில் உள்ளூர் இளைஞர்கள் தொடங்கி சீரமைத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி, ஏம்பல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகளை உள்ளூர் இளைஞர்கள் தங்களின் சொந்த செலவில் தொடங்கி கொடையாளர்கள் கொடுக்கும் நன்கொடைகளையும் பெற்று சீரமைத்து, வரத்து வாரிகளையும் சீரமைத்துள்ளனர்.
அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, நாடியம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். பலபெரிய சவாலான ஏரிகளையும் சீரமைத்து தண்ணீரை நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயம் செழித்து வளர்ந்த மறமடக்கி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடி தண்ணீருக்குகூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. காரணம் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. குளங்களில் தண்ணீர் இல்லை, ஏரிகள் காணாமல் போனது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது மீண்டும் நீர்நிலைகளை மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் உள்ளூர் இளைஞர்கள் மக்கள் செயல் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைந்து குளங்களை தூர் வாரும் பணியை இன்று தொடங்கியுள்ளனர்.
கிராமத்தின் தாய்குலம் என்றழைக்கப்படும் கல்லுகுளத்தில் உள்ளூர் சிறுவர்களைக் கொண்டு பணி தொடங்கப்பட்டது.ஏன் இப்படி என்ற நமது கேள்விக்கு நாளைய சந்ததி இந்த சிறுவர்கள்தான் சிறுவர்களின் கையில் பணியை தொடங்கினால் சிறப்படையும் என்ற நம்பிக்கையில் இந்த பணியை சிறுவர்களை வைத்து தொடங்கியிருக்கிறோம். எந்த ஒரு கிராமமும் நீர் நிலைகள் சரியாக இருந்தால்தான் முழுமையாக வளர்ச்சி பெறும் என்பதை இப்போது தண்ணீர் இல்லாத காலத்தில் உணர்ந்திருக்கிறோம். மீண்டும் தண்ணீரை பெருக்கி விவசாயம் செய்வோம் நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் சீரமைப்போம் நடப்பு பருவ மழையிலேயே குளங்களில் தண்ணீரை சேமிப்போம் என்றனர்.