திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், நான்கு வழி சாலை அமைப்பதற்கான சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்குத் தேவையான தண்ணீரை சாலை ஒப்பந்ததாரர்கள் மாத்தூர் என்ற இடத்தில் உள்ள பெரியகுளத்தில் இருந்து மோட்டார் மூலம் லாரிகளில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (20.02.2021) மோட்டார் மூலம் லாரிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றதை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ‘மாத்தூர், திருவரம்பூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்தப் பெரியகுளத்தில் இருக்கக்கூடிய நீரைக்கொண்டுதான் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கோடை காலம் துவங்கி வறட்சி ஏற்படும் நிலையில், சாலை பணிக்காக தண்ணீரை உறிஞ்சி சென்றால் விவசாயம் செய்வது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும்’ என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் தேவையான தண்ணீர் கிடைக்காது என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களோடு இணைந்து லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.