சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி நடை பயணம் சென்று, முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பாலபாரதி தெரிவித்துள்ளார்.
பாச்சலூர் சிறுமி மரணம் தொடர்பான வழக்கில், கடந்த 10 நாட்களாக குற்றவாளிகளைக் கைது செய்யாத நிலையில், மாதர் சங்கம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாறுதல் செய்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மாதர் சங்கம், விடியல் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக மணிக்கூண்டு அருகே இன்று (24.12.2021) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாலபாரதி பேசியதாவது, “திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சுமார் 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 20 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 187 வழக்குகளில் குற்றவாளிகள் தப்பியுள்ளனர். பல வழக்குகள் இன்னும் கிடப்பிலே உள்ளன. எனவே தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு, திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு பகிரங்கமாக பொது விசாரணை நடத்த முன்வர வேண்டும். திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி மாதம் இறுதியில் திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு, முதல்வரை சந்தித்து, மனு கொடுத்து பொது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்.
இதில் விடியல் பெண்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் டாக்டர் அமலாதேவி, பேராசிரியை வெண்ணிலா, அருட்தந்தை பிலிப் சுதாகர், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராணி, ஜானகி வனஜா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.