ஒரு கையால் கொடுக்கும் உதவி, மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர் முடிதிருத்தும் கலைஞர் மோகன்குமார்.
மதுரை மேலமடையைச் சேர்ந்த இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, தனது மகள் நேத்ராவின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை எடுத்து, ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி என நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்களிடம் இருந்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் திருப்தி என்ற மனநிலை அவருக்கு.
இந்த விஷயத்தை கடந்த 31-ஆம் தேதி மன்கிபாத் வானொலி உரையின்போது குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திமோடி, மோகனின் செயல் மிகவும் போற்றக்கூடியது எனப் பாராட்டுத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகுதான் மோகனையும், அவரது கொடை உள்ளத்திற்குக் காரண கர்த்தாவாக இருந்த மகள் நேத்ராவுக்கும் பாராட்டுகள் குவிந்தன.
வறுமை ஒழிப்புத் தொடர்பாக ஐ.நா.-வில் பேசுவதற்கும் நேத்ராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, நேத்ராவின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்பதாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.1 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் அறிவித்தார்.
இந்தச் சூழலில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த முருகேசன் “டி.பி. மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தமக்கு உதவுமாறு மோகனுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து முருகேசனுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறியிருக்கிறார் மோகன்.
பிறருக்குக் கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது ஒருவித போதை. கொடுத்துப் பழகியவர்களுக்கே அது புரியும் என்பார்கள்..
அந்தப் “போதை” மனிதர்கள் பட்டியலில் மோகன் குமாரும் இடம் பெற்றிருக்கிறார்.