Published on 02/01/2020 | Edited on 02/01/2020
தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8.00 மணியளவில் தொடங்கியது.
அதன்படி கடலூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், விருத்தாசலம் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியிலும், பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை எஸ்.கே.வேலாயுதம் பள்ளியிலும், மேல் புவனகிரி ஒன்றியம் வாக்குகள் எண்ணிக்கை மேல்புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும், மங்களூர் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை திட்டக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கம்மாபுரம் ஒன்றியம் வாக்குகள் எண்ணிக்கை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், மங்களூர் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை உடையார்குடி உயர்நிலைப் பள்ளியிலும், குமராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீரப்பாளையம் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நல்லூர் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய வாக்குகள் எண்ணிக்கை ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் மெட்ரிக் பள்ளியிலும் நடைபெறுகின்றன.
விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையமான திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் காலையில் இருந்து தபால் ஓட்டுகள் எண்ணிக்கை கூட தாமதமானதால் வேட்பாளர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் அதிகாரிகள் செய்தியாளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய தகவல்களை தெரிவிக்காமல் உள்ளதால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதேபோல் கம்மாபுரம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மையமான வடலூர் ஒ.பி.ஆர் கல்வி நிறுவன மையத்திலும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை கூட தாமதமானது. 10 மணியளவில் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு காலை உணவு வழங்க தாமதமானதால் வாக்கு எண்ணும் பணி பாதிப்பப்படைந்தது. அதேசமயம்
வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் தேர்தல் அலுவலர்கள், மேஜையில் படுத்து தூங்கினர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, வாக்குகள் எண்ணப்படாததால் வேட்பாளர்களும், முகவர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே குழுமியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.