
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான மகாதேவன். நவம்பர் 8ஆம் தேதி இரவு, அதே பகுதியில் உள்ள கடையில், ஒரு தனியார் நிறுவன பால் பாக்கெட்டை வாங்கிச் சென்றுள்ளார். அதை அவரது மனைவி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார்.
நவம்பர் 9ஆம் தேதி காலை மகாதேவன் மனைவி 45 வயதான விஜயா, பாக்கெட் பாலை எடுத்து டீ போட்டு, மகாதேவன், அவரது மனைவி விஜயா, 22 வயதான மகன் அருண், 60 வயதான உறவினர் லலிதா ஆகிய 4 பேரும் அதனைக் குடித்துள்ளனர். டீ குடித்த சிறிது நேரத்தில் நான்கு பேருக்கும் வாந்தி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக குடியாத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேபோல் அப்பகுதி கிராம மருத்துவக் குழுவினரும், அந்த பால்பாக்கெட் மற்றும் டீத்தூள் பாக்கெட் போன்றவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த பால்பாக்கெட் வாங்கிய கடையில் போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தி, சாம்பிளுக்கு பால்பாக்கெட் மற்றும் டீ தூள் பாக்கெட்டை வாங்கிச் சென்றனர்.