அண்ணாமலையுடன் கட்சித் தொண்டர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மேடையிலிருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையொட்டி, பாஜகவினர் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை, இந்தியா முழுதும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் சிவகங்கை மாவட்டம், அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, காரைக்குடி முன்னாள் MLA சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அண்ணாமலைக்கு மாலை அணிவித்து அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக, பாஜகவினர் மொத்தமாக மேடையில் குவிந்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பாஜகவினர் பலரின் சட்டை கிழிந்தது. இதனால், அந்த விழா மேடையே அமளி துமளியானது.
இந்த அமளியில், மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் MLA சோழன் மீது சிலர் மோதினர். இதனால், தடுமாறிய சோழன் மேடையில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கவனித்த சிலர் ஓடிச்சென்று அவரை மீட்டனர். இந்தச் சம்பத்தின் வீடியோ காட்சிகள், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.