‘பெண்கள் படிக்கிற கல்வி நிறுவனப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படியா நடந்துகொள்வது?’ என, முக்கியப் பிரமுகர்கள் குறித்து சிலர் வாட்ஸ்-ஆப் மூலம் தகவல் பரப்புவதும், அதனால் தாக்கப்படுவதும், விருதுநகரில் தொடர்ந்து நடக்கின்றன.
"மது விருந்தில் பெண்களோடு பெரும் தலைகள்! –விருதுநகரைக் கலக்கும் வீடியோ!" எனும் தலைப்பில், கடந்த 2019 அக்டோபர் 02-04 நக்கீரன் இதழிலும், இணையத்திலும் செய்தி வெளிவந்ததும், மணிகண்டன், நாராயணமூர்த்தி, ஆகாஷ் டிவி பிரேம்குமார் ஆகிய மூவரையும், விருதுநகர் கிழக்குக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று, ‘உங்களில் யார் நக்கீரனுக்கு செய்தி கொடுத்தது? மெட்ரிகுலேஷன் பள்ளிச் செயலாளரும், ஆசிரியையும் உள்ள வீடியோ உங்களில் யாரிடம் இருக்கிறது?’ என்று கேள்விகளால் துளைத்தெடுத்து, புகார் அளித்த தொழிலதிபர் முரளி மற்றும் ராமமூர்த்தி கண்முன்னே பி.வி.சி. பைப்பால் அடித்ததில், மணிகண்டனின் இடது கை முறிந்து தொங்கியது. இந்த விவகாரம், 2019 அக்டோபர் 19-22 நக்கீரன் இதழில், ‘அந்த வில்லங்க வீடியோ எங்கே? கூலிப்படையாக மாறிய காவல்துறை’ என்னும் தலைப்பில் செய்தியாக வெளிவந்தது.
இத்தோடு பிரச்சனை நின்றபாடில்லை. ‘கரோனா காலத்திலும் தொழிலதிபர் முரளி மற்றும் அவரது நண்பரான காவல்துறை அதிகாரிக்கு, பொங்கல் விழா நாளில் மாரியம்மன் கோவில் கதவுகள் திறக்கப்பட்டன. பணபலமும் அதிகார பலமும் கைகோர்த்து கோவிலுக்குள் சென்றதை, ஊர்மக்களால் ஜீரணிக்க முடியவில்லை..’ என வாட்ஸ்-ஆப் மூலம் பரப்பிய விவகாரம், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் ‘கோவிலில் ஆண்டியும் அரசனும் ஒன்றல்லவா? –கேள்வி கேட்கும் விருதுநகர்!’ என்னும் தலைப்பில் செய்தியாக வெளிவந்தது. இதன் நீட்சியாக, ‘மதம் மாறினால் ஜாதியை இழந்துவிட வேண்டியதுதான். இனி அவர், தன் ஜாதியைக் கூறமுடியாது..’ என, பலருக்கும் அனுப்பப்பட்ட வாட்ஸ்-ஆப் தகவலால், மேலும் ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது.
விருதுநகரில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் இரண்டாகப் பிரிந்து நிற்கின்றனர். இதில் ஒரு தரப்பு, ஊர்ப் பெரிய மனிதர்களின் அந்தரங்கம் மற்றும் குடும்ப விவகாரத்தைக் கூட, வாட்ஸ்-ஆப் மூலம் அம்பலப்படுத்துகிறது. இன்னொரு தரப்பு, பணபலத்தால் தாக்குதல் நடத்தி, அவர்களை அடக்கத் துடிக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் கடந்த 12-ஆம் தேதி, அதிகாலை 4-15 மணிக்கு நடந்துள்ளது. ‘ஆகாஷ் டிவி’ பிரேம்குமார் நடைபயிற்சி சென்றபோது, ஒரு கும்பல் அவரை மறித்து, இரும்புக் கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் வெறிகொண்டு தாக்கி, கைகளையும், கால்களையும் உடைத்திருக்கிறது.
இரு தரப்பினரும் தொடர்ந்து மோதிக்கொள்வது ஏன்?
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, விருதுநகரில் வெவ்வேறு வியாபாரம் செய்துவந்த நாடார் சமுதாய மக்கள், ஊர் வளர்ச்சிக்காக, தங்களது வியாபாரத்தின் பெயரிலேயே ‘மகமை’ என்ற அமைப்பினை ஏற்படுத்தினார்கள். விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக் கடை மகமை, பஞ்சுக்கடை மகமை, அரிசிக்கடை மகமை ஆகியவை முன்னோடி மகமைகள் ஆகும். இதன் மூலம், நாடார் சமுதாயத்துக்கென்று பல இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டன. கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டன. காலப்போக்கில், சிலர் சுயநலமாக நடந்து கொண்டனர். கல்வி நிறுவனங்களில் இருந்து கோடிகோடியாகச் சுரண்டினர். கோவில் சொத்துகளையும் அபகரித்து, தங்களுடைய பெயரில் சிலர் பதிவு செய்தனர். இந்த விவகாரம், நீதிமன்றம் வரை போய் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பஞ்சுக்கடை மகமை தரப்பினர் வெளியேற்றப்பட்டனர். பொது ஸ்தாபனங்களின் நிர்வாகத்தில் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ‘நீங்கள் மட்டும் யோக்கியமா?’ என, பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள் மீது சிலர் குற்றம் சுமத்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரேம்குமாரும், அவருடைய மனைவி மஞ்சுவும், உயிர்ப் பயத்தில் காணப்பட்டனர். அவர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்ட நிலையில், பிரேம்குமாரின் நட்பு வட்டத்திலுள்ள மணிகண்டனைச் சந்தித்தோம்.
“முரளிக்கு போலீஸ் மட்டத்தில் ரொம்ப செல்வாக்கு. அதனால், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார்கிட்ட பணத்தைக் கொடுத்து, ஸ்டேஷன்ல வச்சு என் கையை உடைச்சாரு. போலீஸும் என் மேல பொய் கேஸ் போட்டுச்சு. நான் ஹைகோர்ட் போனேன். இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், தன் தவறை ஹைகோர்ட்டில் ஒத்துக்கிட்டார். அதனால், எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மருத்துவ இழப்பீடு தர வேண்டியதாயிற்று. அந்த ஐம்பதாயிரத்தையும் முரளிகிட்ட வாங்கித்தான் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் கொடுத்தார். எதுக்கு டபுள் செலவுன்னு நினைச்சோ என்னமோ, இந்தத் தடவை நேரடியா கூலிப்படையை வச்சே, பிரேம்குமார் மேல கொலைவெறி தாக்குதல் நடத்திருக்காங்க. அதுவும், இனிமேல் வாட்ஸ்-ஆப்பில் தங்களைப் பற்றி தகவல் பரப்பக்கூடாதுன்னு, பிரேம்குமார் கை மணிக்கட்டை அடிச்சு நொறுக்கிருக்காங்க.
பிரேம்குமார் ஏற்கனவே, முரளியாலும், ராமமூர்த்தியாலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்துன்னு மேல வரைக்கும் புகார் கொடுத்திருக்காரு. போலீஸ் அந்தப் புகாரை கண்டுக்கல. இப்ப கொலை செய்யுற அளவுக்கு தாக்குதல் நடந்தும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ‘பெட்டி கேஸ்’ அளவுக்கு சாதாரண செக்ஷன்கள் போடப்பட்டிருக்கு. இப்ப 6 பேரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இவங்கள்லாம் கரிக்கோல்ராஜுக்கு வேண்டிய கனகரத்தினத்தோட ஆட்கள். முரளியும், ராமமூர்த்தியும் தலைமறைவாயிட்டாங்க. இதுக்கு முன்னால இப்படித்தான் சேஷாத்ரி கொலை நடந்துச்சு. இனி என்னென்ன நடக்கப் போகுதோ?” என்றார் பீதியுடன்.
விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்குமாரை தொடர்புகொண்டோம். “நக்கீரனா? போன்ல உங்ககிட்ட பேசுறதுன்னா.. பயமா இருக்கு..” என்று லைனைத் துண்டித்தார்.
தொழிலதிபர் முரளியோ “அந்த பிரேம்குமார் ஒரு பிளாக்மெயிலர். ஊரு முழுக்க பகைச்சு வச்சிருக்காரு. அவருக்கு நெறய எதிரிங்க இருக்காங்க. அவரை அடிச்சவங்க ‘முரளியிடமும் ராமமூர்த்தியிடமும் ஏதாவது பிரச்சனை செய்தால் அவ்வளவுதான். இத்தோடு செத்துப்போடா..’ இப்படிச் சொல்லித்தான் அடிச்சாங்களாம். நாங்க அனுப்பிய ஆளுங்கன்னா.. எங்க பேரைச் சொல்லியா அடிப்பாங்க? இதுல இருந்தே தெரியலியா? இது அபாண்டமான புகார்ன்னு. எனக்கும் இந்தத் தாக்குதலுக்கும் துளியும் சம்பந்தம் இல்ல. நான் எதுக்கு தலைமறைவு ஆகணும்? இப்ப கொடைக்கானல்ல இருக்கேன். போலீஸோட விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்.” என்று முடித்துக்கொண்டார்.
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜுவிடம் பேசினோம். “சங்கத்துக்கெல்லாம் முன்னோடியா இருந்துக்கிட்டு விருதுநகர்ல இப்படி மோதிக்கிறது எனக்குப் பிடிக்கல. ரெண்டு தரப்புமே நான் சொன்னத கேட்கல. அதனால, நான் ஒதுங்கிட்டேன்.” என்று வருத்தப்பட்டார்.
போற்றுதலுக்குரிய முன்னோர் தியாகத்தை விருதுநகரின் முக்கியஸ்தர்கள் சிலர் மறந்துவிட்டனரே!