“எதற்கெடுத்தாலும் சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாக அபாண்டமாகக் குற்றம் சுமத்துவது கொடுமையல்லவா?” என்று தலையிலடித்துக்கொள்கிறார்கள், காரியாபட்டி தாலுகா காவல்துறையினர். காரணம் ஆவியூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் வீரணன் எடுத்த நடவடிக்கையும், அதனால் எழுந்த விமர்சனமும்தான்.
என்ன விவகாரம்?
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஆவியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விமலா, தனது டூவீலர் சாவி பள்ளியில் தொலைந்துவிட்டதாக ஆவியூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். உடனே, சார்பு ஆய்வாளர் வீரணன் அப்பள்ளிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட 12- ஆம் வகுப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது மாணவர்களின் சாதியைச் சொல்லி திட்டியதாகவும், அடித்ததாகவும் மாணவர் தரப்பு குற்றம் சாட்டிய நிலையில், ஆவியூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் வீரணனைத் தொடர்புகொண்டோம். “தலைமை ஆசிரியர் விமலா ப்ளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ் மீது புகார் கொடுத்தாங்க. விசாரிக்கப் போனோம். அப்ப அவங்க என்கிட்ட, டூவீலர் சாவி தொலைஞ்சது பெரிய விஷயம் இல்ல. என் தம்பிகிட்ட ஸ்பேர் சாவி இருக்கு. ஆனா.. ஸ்டூடண்ட்ஸ் அசிங்க அசிங்கமா பேசுறாங்க. கேலி பண்ணுறாங்க. விசிலடிக்கிறாங்கன்னு கவலையா சொன்னாங்க. நான் என்ன வாத்தியாரா அடிச்சு திருத்துறதுக்கு? ஸ்கூலுக்குள்ள மாணவர்களை போலீஸ் அடிக்கிறதெல்லாம் நடக்கிற காரியமா? சத்தியமா நான் யாரையும் அடிக்கல. ஒரு மாணவனை தோளைத் தொட்டு அட்வைஸ் பண்ணுனேன். அதுக்கே என்னைப் பார்த்து முறைச்சாங்க. அந்த க்ளாஸ்ல ஒண்ணு ரெண்டு பேர்தான் ஆல்பாஸ். மற்ற யாரும் ஆல்பாஸ் ஆகல. பத்து நாளைக்கு முன்னால கம்ப்யூட்டர் ரூம்ல ஸ்விட்ச் போர்ட எல்லாம் உடைச்சாங்க.
அந்த மாணவர்களில் பத்து பேர் அகமுடையார். ஒருத்தர் வலையர் சமுதாயம். பட்டியலினத்தில் யாரும் இல்ல. இதுல சாதி பேரைச் சொல்லி நான் எப்படி திட்டமுடியும்? இங்கே ஸ்கூல்ல கஞ்சா வித்தாங்க. கோயம்புத்தூர்ல இருந்து கொண்டுவந்து ஹெராயின் பவுடர் வித்தாங்க. கஞ்சா வித்தவங்கள புடிச்சி ரிமான்ட் பண்ணிருக்கோம். ஹெராயின் வித்த பசங்கள ஹோமுக்கு அனுப்பிருக்கோம். இங்கே மோடிவ் இருக்கு. அதனாலதான், தேவையில்லாத பிரச்சனைய அப்பப்ப கிளப்புறாங்க. காவல்துறை மாணவர்களின் நலனில் அக்கறையா செயல்படுதா? தப்பான வழில தூண்டிவிடறவங்க சரியா செயல்படறாங்களான்னு பார்க்கணும்.” என்றார் வேதனையுடன்.
ஆசிரியர் ஒருவர் நம்மிடம் “இந்த காரியாபட்டி தாலுகா பள்ளிகளில் ஆசிரியரின் சைக்கிள் டியூபில் காற்றை பிடுங்கிவிடுவது போன்ற தகாத செயல்களில் எல்லாம் சில மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். டிரவுசர் பையில் பீடி, சிகரெட்டோடு வருகிறார்கள். ஒருசிலர் மது அருந்திவிட்டும் வருகிறார்கள். ஆனால், யாரையும் ஆசிரியர்கள் கேள்வி கேட்க முடியாது. எதுவும் சொல்லமுடியாது. மாணவனை நல்வழிப்படுத்த கறார் முகம் காட்டினால், அப்புறம் தேவையில்லாத பிரச்சனைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டியது வரும். அதனால், எதற்கு வம்பென்று சும்மா இருந்துவிடுகிறோம். இந்த எஸ்.ஐ. வீரணன் நல்லவர்தான். ஆனா, கடுமையா பேசுவாரு. இந்தமாதிரி ஒரு எஸ்.ஐ.தான் வேணும்னு ஊருக்காரங்க விரும்புனதுனால, மூணாவது தடவையா இந்த ஆவியூர் ஸ்டேஷன்ல டூட்டி பார்க்கிறாரு. மாவட்ட எஸ்.பி. கையால சிறந்தவர் விருதெல்லாம் வாங்கிருக்காரு.” என்றார்.
இது டிஜிட்டல் உலகமாக மாறினாலும், வள்ளுவர் வாக்கு, எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதே. திருக்குறள் வாயிலாக ‘செல்வந்தர்களிடம் உதவிகேட்கும் எளியவர் பணிவோடு நிற்பதுபோல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்பவரே சிறந்தவர், அவ்விதம் கல்லாதவர் இழிந்தவரே!’ என்று மாணாக்கர்களுக்கு ‘பொளேர்’ என உரைத்திடும் வகையில், ஆசிரியரின் பெருமையை விளக்கியிருக்கிறார்.