Skip to main content

முரண்டு பிடித்த வியாபாரிகள்; அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்ட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

viruthasalam farmers struggle govt officers

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்ய எடுத்து வருவது வழக்கம்.

 

இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் ஆன்லைன் ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகளை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இ-நாம் திட்டத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால் கிரேட் வாரியாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் தரத்தை பிரித்து வழங்கிய பின்புதான் விலை நிர்ணயம் செய்ய முடியும். உரிய இயந்திரங்கள் இருந்தும் தரம் பிரித்து வழங்குவதில்லை. செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்ய சிக்னல்கள் சரிவர கிடைக்காது. விளைபொருட்களின் வரத்து அதிகம் இருக்கும் போது கொள்முதல் செய்ய காலதாமதம் ஆகும் என்பதால் செல்போனில் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக விளைபொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தில் தொலைபேசி மற்றும் கணினி வாயிலாக விளைபொருட்களுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மறு ஏல தேதி விவசாயிகளுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.  

 

இதனிடையே, மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்  தங்க. தனவேல் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடந்த  4  நாட்களாக மூடி வைத்த, வேளாண் விற்பனை குழு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்துவதாகக் கூறி  சந்தன மாலை, வெற்றிலை பாக்குடன் வந்ததுடன், அங்கிருந்த அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் கொடுத்து, அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்ட முயன்றனர். மாவட்ட விற்பனை குழு செயலர் விஜயா விவசாயிகள் கொடுத்த இனிப்பை, வாங்க மறுத்ததுடன் பாராட்டையும் ஏற்க மறுத்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

 

viruthasalam farmers struggle govt officers

 

இதேபோல சார் ஆட்சியர் பழனி, விவசாயிகள் கொடுத்த சாக்லெட்டை வாங்கிக் கொண்டு அவர்களைச் சமாதானப்படுத்தினார். அப்போது விவசாயிகள், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ-நாம் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டும் கடந்த 2 வருடங்களாக மேற்கண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. வியாபாரிகள் வேண்டுமென்று நடைமுறைப்படுத்தாமல் லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், விற்பனை கூடத்தை மூடி வைத்துள்ளனர்.

 

இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பதில்லை. இ-நாம் திட்டம் குறித்து இதுவரை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. விளைபொருட்களை தரம் பிரித்து அரசு அறிவித்துள்ள அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்கவில்லை. எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருட்களை கொள்முதல் செய்யாத நேரங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு 70 சதவீத அளவிற்கு கடன் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சார் ஆட்சியர் பழனி, “டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சோளம் இ-நாம் திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும். விரைவில் அனைத்து பொருட்களும் இ-நாம் திட்டம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று முதல் வழக்கம்போல ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறும்” எனத் தெரிவித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்