கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும் , விருத்தாசலம் கோட்டத்தில் இருந்து எந்த ஒரு பகுதியையும் பிரிக்கவோ, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்க்கவோ கூடாதென வலியுறுத்தியும் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திட்டக்குடி வட்டம் ராமநத்தம் தொழுதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழுதூர் உழவர் மன்ற தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.டி.ராஜன், கீழக்கல்பூண்டி உழவர் மன்ற தலைவர் விஜயகுமார், தமிழக விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல், மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், பாவேந்தர் பேரவை அமைப்பாளர் ஓவியர் ராஜ்மோகன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்காமன், விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் வெங்கடகிருஷ்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். பொதுமக்கள், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ரஜினிராஜா நன்றி கூறினார்.