சத்தமில்லாமல், சில சாதனைகளைச் சிலர் செய்வதால் தான் மனிதநேயம் எங்கோ ஒரு மூலையில் உள்ளது என்பதை நாம் உணர முடிகிறது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கடந்த 2002- 2005 ஆம் ஆண்டு இளங்கலை கணினி கல்வி பயின்ற உளுந்தூர்பேட்டை அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன், 7 நண்பர்களை ஒருங்கிணைத்து அப்பகுதியில் உள்ள முகந்தரியான்குப்பம், சிறுவரப்பூர், சின்ன கோட்டுப்பாலை, பெரிய கோட்டுப்பாலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2003 -ஆம் ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு உள்ளிட்ட கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2004 -ஆம் ஆண்டு 'கருணை விழிகள்' எனப் பதிவு செய்யப்பட்டு, கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி குறித்து அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளனர் இந்த நண்பர்கள். கடந்த 2004 -ஆம் வருடம் பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமி பாதித்தது. தொண்டு நிறுவன உதவியுடன் இந்தப் பகுதியில் வந்து, அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில மாதங்கள் உதவி செய்துள்ளனர். அப்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பார்த்து இவர்களை ஏன் நாம் வளர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பரங்கிப்பேட்டை பகுதியில் பள்ளிகால நண்பர்களான பெரியகுமட்டி மரகதம், சரஸ்வதி, விழலா, வெங்கடேசன் ஆகியோர்களின் கூட்டு முயற்சியால் பு.முட்லூர் பகுதியில் 'கருணை இல்லம்' எனத் தொடங்கி பெற்றோர்களை இழந்த குழந்தைகளை, அரசு அனுமதியுடன் வளர்த்து வருகிறார்கள். இந்தக் கருணை இல்லத்தின் செயல்பாடுகளை, நன்கு ஆய்வு செய்த அப்போதைய சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுப்பிரமனியன் ஐ.ஏ.எஸ்., அரசு சார்பில் மஞ்சக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பு.முட்லூரில், 10 சென்ட் இடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு, அரசிடம் இருந்து எந்த உதவியும் இல்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு நண்பர்களின் உதவிகளைப் பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட பெற்றோர்களை இழந்த ஆண் பிள்ளைகள் தங்கியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் வயதுக்கு ஏற்றவாறு கருணை இல்லத்திற்கு அருகே இருக்கும் சம்பந்தம் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், பு.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். கருணை இல்லத்தில் மாணவர்களுக்குத் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'விழி' கலைக்குழு என்ற பெயரில் 'பறையிசை', 'சிலம்பாட்டம்', 'சாட்டையடி', 'சாக்கை' உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 -ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 'விழி' கலைக்குழு மாணவர்கள் பங்குபெற்று பாரம்பரிய கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசை, அப்போது ஆட்சியராக இருந்த அன்புச்செல்வனிடம் பெற்றுள்ளனர்.
பள்ளி நேரத்தை முடித்து, கருணை இல்லத்திற்கு வரும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், பள்ளியில் கொடுக்கப்படும் வேலைகள் குறித்து, சிவசங்கரன் மற்றும் மரகதம் ஆகியோர் பிள்ளைகளுடன் தங்கிக்கொண்டு பயிற்சி கொடுக்கிறார்கள். இது பிள்ளைகளின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக, கருணை இல்லத்தின் அருகே உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, இங்கு கல்வி பயின்ற மாணவர்கள், 3 பேர் மேல்நிலை கல்வியை முடித்து, 'அகரம்' ஃபவுண்டேஷன் மூலம் இளங்கலை பட்டப்படிப்புக்குக் கல்லூரியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கருணை விழிகளுடன், கருணை இல்லம் அனைத்துத் தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையறிந்த சிலர், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் இங்குள்ள பிள்ளைகளுக்கு உணவு, உடைகளை வழங்கி உதவி செய்கிறார்கள். இதனைக் கொண்டு, அவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், 'கருணை இல்லம்' மூலம் சம்பந்தம் கிராமத்தில் உள்ள, தூர்ந்துபோன குளத்தை மிகச் சிறப்பாக நண்பர்களின் உதவிகளோடு தூர்வாரி, குளக்கரையில் பனைவிதைகள் நடுவது குறித்து, கருணை இல்லப் பிள்ளைகள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது குளத்தில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது என்று அந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள்.
மேலும், பெண்களுக்குக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, அவர்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவது போன்று கிராமத்தில் தங்கிக்கொண்டு சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்து வருகின்றனர்.