சமூகவலைதளத்தை சிலர் குப்பையான சமாச்சாரங்களைக் கொட்டுவது, தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்கள் குறித்து ஏகத்துக்கும் பேசுவது, பிற மதத்தினரைப் புண்படுத்தும் விதத்தில் பதிவிடுவது என பயன்படுத்தி வருகின்றனர். அப்படியொரு நபர்தான், அந்தக் காலத்துப் பட்டதாரியான 66 வயது நாகராஜன்.
தன்னைப் பற்றி நாகராஜன் ‘நாடகக்காரன் – சினிமா நடிகன் – துணிச்சல் பேச்சாளன் – குடும்பத் தலைவன் – சிறைக்கைதி – வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவன் – இரக்கமுள்ள மனசுக்காரன் என்பது யாரும் அறியாத உண்மை’ என ட்விட்டர் குறிப்பில் விவரித்துள்ளார். ‘ராதா இல்லாபடம் சாதா’ என்ற பெயரிலான இவரது ட்விட்டர் பக்கத்தை 35,900 பேர் பின்தொடர்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த நாகராஜனை, பா.ஜ.க. அனுதாபி என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் பா.ஜ.க. தலைவர்களையும் திட்டுகிறார். குறிப்பாக, கலைஞரையோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையோ, பிற மதத்தினரையோ நாகராஜன் தனது ட்விட்டரில் தொடர்ந்து அவதூறு பதிவிட்டு வந்துள்ளார். இவருடைய எல்லா பதிவுகளுமே, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என சம்பந்தப்பட்டவர்களை டென்ஷன் ஆக்குபவை.
தறிகெட்டு ஓடும் நாகராஜன் போன்றவர்களுக்கு சட்டம் என்ற கடிவாளம் இருக்கிறதே?, நாகராஜனது ‘ராதா இல்லாபடம் சாதா’ ட்விட்டர் பக்கத்தை முடக்கி நடவடிக்கை எடுக்கும்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் திருத்தங்கல் காவல்நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகாரளிக்க, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.
கைதான நிலையில் ‘எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. இத்தனை ஆயிரம்பேர் என்னைப் பின்தொடர்கிறார்கள். எனது கருத்துகளை ஆதரிக்கிறார்கள்’ என நாகராஜன், இந்த வயதிலும் தெனாவட்டாகப் பேசியிருக்கிறார். வலைத்தளங்களில் இத்தகைய பதிவர்கள் மலிந்துகிடக்கின்றனர்.