விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீடுகளில் ‘கரோனா தொற்று! உள்ளே நுழையாதே! தனிமைப்படுத்தப்பட்ட வீடு!’ என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இவ்வீட்டில் உள்ளவர்கள், சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள இந்த அவசரகால நடவடிக்கையைத் திரித்து, வாட்ஸ்- அப் தகவல் மூலம் வதந்திகளாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் சிலர் பரப்பி வருகின்றனர். அதனால், “சிவகாசியில் அந்த ஏரியா பக்கம் போகாதீங்க.. திருத்தங்கல்லில் இந்த ஏரியா பக்கம் போகாதீங்க..”என்று தெருக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்குச் சென்றால் கரோனா தொற்றிக்கொள்ளும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள தர்மராஜ் என்பவர் நம்மிடம் பேசினார். “நான் தாய்லாந்து போயிட்டு வந்து 45 நாள் ஆகுது. எனக்கு இருமலோ, காய்ச்சலோ எதுவும் இல்ல. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கேன். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் எங்க வீட்ல வந்து கரோனா ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிட்டாங்க. இதை யாரோ போட்டோ பிடிச்சு, எனக்கு கரோனான்னு, என்னோட செல்போன் நம்பர் இருக்கிற அந்த ஸ்டிக்கரையும் வாட்ஸ்- அப்ல போட்டு கன்னாபின்னான்னு வதந்தி கிளப்பிட்டாங்க. இப்ப பாருங்க.. சென்னை, டெல்லில இருந்தெல்லாம் போன் பண்ணி,‘உனக்கு கரோனாவாம்ல.. ஏன் வீட்ல இருக்க? உடனே ஜி.எச்.சுக்கு போ’ன்னு ஆளாளுக்கு விரட்டுறாங்க. அதுல ஒருத்தர்‘கரோனாவா பேசுறது?’ன்னு கேட்டாரு.‘அய்யா நான் கரோனா இல்ல.. என் பேரு தர்மராஜ்.. எனக்கு கொரோனா எதுவும் இல்லை’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு‘தம்பி, பொய் சொல்லாதீங்க.. உங்க நோய் உங்களோட போகட்டும். யாருக்கும் பரப்பாதீங்க’ன்னு அட்வைஸ் வேற பண்ணுனாரு. அக்கம் பக்கத்துலயும் தள்ளி நின்னு ஒருமாதிரி பார்க்கிறாங்க. என்னத்தச் சொல்ல? ஒவ்வொருத்தர்கிட்டயும் என்னோட நிலைமைய விளக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. என்னோட பிரச்சனைய நக்கீரன்ல போடுங்க சார்.”என்றார் வேதனையுடன்.
சிவகாசியில், மேலும் மூன்று வீடுகளில்‘கரோனா தொற்று’ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்- அப் வதந்தியால், அங்கு வசிப்பவர்களும், தர்மராஜ் போலவே சங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் காண்பது நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்! அதனை, கரோனா அச்சத்தில் மக்கள் தவிக்கின்ற நேரத்தில், தவறான கண்ணோட்டத்தோடு சிலர் பார்ப்பதும், வதந்தி பரப்புவதும், பொறுப்பற்ற செயல் ஆகும்.