விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“சென்னை தலைநகரம் ஆகி நூற்றாண்டு காலத்திற்கு மேலாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில், மக்கள் தொகை பல மடங்கு கூடிவிட்டது. தென்பகுதியில் ஒரு தலைநகரம் அமைய வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மன்னர்கள் ஆண்ட பூமியான மதுரையைத் தலைநகராகக் கொண்டு, புதிய தலைநகரம் அமைந்தால் தென் மாவட்ட மக்கள் பெரும் பயன் அடைவார்கள். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியார்தான் முடிவு எடுக்க வேண்டும். திருச்சியில் இரண்டாம் தலைநகரம் அமைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் காலத்திலேயே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. ஒருமித்த கருத்தோடு தென்மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தலைநகரம் மதுரையில் அமைந்தால் மகிழ்ச்சியே!
தேர்தல் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க.விற்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அம்மா ஆட்சி மீண்டும் அமையும். தி.மு.க.வை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை. குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் தி.மு.க.விற்குள் உட்கட்சிப் பூசல் என்ற பூகம்பம் உருவாகி வருகிறது. அது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறி இரண்டாகப் பிளக்கும். அ.தி.மு.க. பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, தற்போது தெளிந்த நீரோடையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நீரோடையில் யாரும் களங்கம் கற்பிக்க முடியாது.
2021 தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவு எடுப்பார்கள். தலைமை இலக்கைக் காட்டிவிட்டால், அம்பைத் தொடுத்து போர் தொடுப்பது மட்டுமே எங்களின் வேலை.
மத்திய அரசைப் பொறுத்தமட்டிலும், பின்னால் இருந்து இயக்குவோம். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் முன்னால் நின்று இயங்குவோம்.”
-இவ்வாறு பேட்டியளித்துக் கொண்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், ‘எடப்பாடியே என்றும் முதல்வர் என்ற கருத்தில் மாற்றம் உண்டா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ”தலைமைக் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.” என்று உஷாராக நழுவினார்.
ஜெயலலிதா இருந்தபோது கடைப்பிடித்த ராணுவக் கட்டுப்பாட்டைக் காப்பதென்பது இதுதானோ?