‘தேர்தல் விதிகளை முழுமையாகப் பின்பற்றி முறைகேடுகள் இல்லாமல் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.’என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.
வழக்கறிஞர்கள் சிலருடையை முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை,‘ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், முறைகேட்டிற்கு வழிவகுக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.’ என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
விருதுநகர் ஒன்றியத்திலுள்ள கூரைக்குண்டு ஊராட்சி 8- வது வார்டில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட ராமமூர்த்தியும், தேர்தல் முடிவுகளை அறிவித்ததில், ஆளும் கட்சியினர் தலையீட்டில் தில்லுமுல்லு நடந்ததாக அடித்துச் சொல்கிறார்.
“வாக்கு எண்ணும்போது, தனக்கும் இன்னொரு போட்டியாளரான சரவணனுக்கும் 183 வாக்குகள் சரிசமமாகக் கிடைத்தது. குலுக்கல் முறையில் வெற்றியை அறிவிப்போம் எனச் சொல்லிவிட்டு, சத்தமில்லாமல் சரவணனுக்கு வெற்றிச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்கள். சரவணன் தங்களுக்கு ஆதரவானவர் என்பதாலேயே, தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இந்தக் காரியத்தைச் சாதித்திருக்கிறார்கள் ஆளும் கட்சியினர்.
லஞ்சம் வாங்கிய தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான (வட்டார வளர்ச்சி அலுவலர்) காஜா மைதீன் வந்தே நவாஸ், உடல் நலக்குறைவு எனச் சொல்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். லஞ்சம் வாங்கிய நாளிலிருந்து அலுவலகம் பக்கம் வரவே இல்லை.” என்று நம்மிடம் புலம்பிய ராமமூர்த்தி, இதுகுறித்த புகாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆணையம் வரை அனுப்பியிருக்கிறார்.
தேர்தல் அதிகாரிகளின் ஆளும்கட்சி பாசத்தால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய மன உளைச்சலால், தீக்குளிக்க முயற்சித்து காவலர்களால் தடுக்கப்பட்டார் ராமமூர்த்தி. தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் நடத்தியதால், 42 பேர் மீது வழக்கு வேறு பதிவாகியுள்ளது.
தேர்தல் அலுவலரும் விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலருமான காஜா மைதீன் வந்தே நவாஸை நேரில் சந்தித்து நியாயம் கேட்டே ஆகவேண்டும் என்று ராமமூர்த்தி அடம்பிடிக்க, அருப்புக்கோட்டையிலுள்ள அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். படுக்கையில் இருந்தவரைப் பார்த்த மாத்திரத்தில் ராமமூர்த்தி டென்ஷன் ஆகி சத்தம் போட்டிருக்கிறார். உடன் வந்த போலீஸ் அதிகாரி ராமமூர்த்தியின் வாயைப் பொத்தி,“இப்படியெல்லாம் சத்தம் போட்டீங்கன்னா.. அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும்.”என்று கூறி வெளியே இழுத்து வந்திருக்கிறார்.
காஜா மைதீன் வந்தே நவாஸை தொடர்ந்து தொடர்பு கொண்டோம். அவர் நம் லைனுக்கு வரவே இல்லை. நாம் அனுப்பிய குறுந்தகவலுக்கும்பதிலில்லை. “நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்..” என்று கொதிநிலையில் பேசிய ராமமூர்த்தி,“நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்..”என்றார். “தேர்தல் அதிகாரிகள் இப்படியா விலை போவார்கள்? ஆளும்கட்சியினருக்கு சாதகமாக இத்தனை பகிரங்கமாகவா நடந்துகொள்வார்கள்? இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று முழுமையாக நம்பி தேர்தலில் போட்டியிட்டேன். அதுதான் நான் செய்த தவறு.”என்று புலம்பி அழுதார்.
இதுபோன்ற வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. பல இடங்களில் பாதிப்புக்கு ஆளானவர்களை‘சரிக்கட்டி’சமாதானப்படுத்தி உள்ளனர்.