விருதுநகர் மாவட்டம், சிவகாசி- கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 20- ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். பெயிண்டர் வேலை பார்க்கும் தனது தந்தை சுந்தரத்திடம், இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று கூற, “போ.. போ..” என்று வீட்டருகில் உள்ள முட்புதர் பக்கம் போகச் சொல்லியிருக்கிறார். போனவள் நெடுநேரமாகத் திரும்பி வராத நிலையில், தேடிப்பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மறு நாள் காலை சற்று தள்ளியிருந்த புதர் அருகே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் காவல்துறை உயரதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்த ஏரியாவில், சந்தேகப்படும்படியான சுமார் 100- க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். செல்போன் டவர் டம்ப் மற்றும் அழைப்புகளின் விவரம், சிசிடிவி பதிவுகள் என ஒன்றுவிடாமல் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். விசாரணையின் முடிவில், சிறுமி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மோஜாம் அலி என்பது கண்டறியப்பட்டது. இவன், அசாம் மாநிலம், நல்பாரி மாவட்டம், போரல்குஷி கிராமத்தைச் சேர்ந்தவன். சிவகாசியிலேயே தங்கி கோணிப்பை தைக்கும் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்திருக்கிறான். விசாரணையில் தீவிரம் காட்டியபோது, காணாமல் போன சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததை அவன் ஒப்புக்கொள்ள, உடனடியாக கைது செய்யப்பட்டான்.
மோஜாம் அலியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கினை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 6- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.