விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் உள்ள விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரித்துவருவது காலங்காலமாக நடந்துவருகிறது. விருதுநகர் மாவட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் என அனைத்து துறையினருக்கும் இந்த விவகாரம் நன்றாகவே தெரியும்.
ஆனாலும், உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் விதிமீறலைக் காரணம் காட்டி லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கும் அதிகாரிகள், வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்களைக் கண்டுகொள்வதில்லை. அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கு சேதாரமாகிவிடும் என்பதால், அரசியல்வாதிகளின் ஆசியும் இவர்களுக்கு உண்டு. வீடுகளில் பட்டாசு தயாரிக்கும்போது, வெடி விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்படும்போதெல்லாம், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்.
இன்று (21.06.2021) காலை 8.30 மணியளவில், சாத்தூர் – தாயில்பட்டியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் சூர்யா என்பவர், தன்னுடைய வீட்டில் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது. அதனால், அவருடைய வீடு உட்பட பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளும் தரைமட்டமானது. வெடி பொருளில் உராய்வு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று வழக்கம்போல் சொல்லப்படுகிறது.
இந்த விபத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள் கற்பகம், செல்வமணி மற்றும் வீட்டில் இருந்த 5 வயது சிறுவன் சல்மான் ஆகியோர் உயிரிழந்தனர். வீட்டு உரிமையாளர் சூர்யா மற்றும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்துவரும் பட்டாசுத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக சட்டரீதியாக பல சோதனைகளைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், இதுபோன்ற விபத்துகள் வேறு ஏற்பட்டு இத்தொழிலுக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளன.
சல்மான் என்ற ஐந்து வயது சிறுவனுக்குத் தெரியுமா, தன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கிறார்கள் என்பது. அநியாயமாக ஒரு பாலகன் உயிரையும் பறித்துவிட்டது இந்த விபத்து!