திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மணப்பாறை தாலுகா வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் செக்கணம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் தலைமையில் வந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,
பழைய கோட்டை மற்றும் செக்கணம் ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கருங்குளம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி மிகவும் பழமையானதாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 125 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. பொன்னணியாறு அணையில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான வரத்து வாய்க்கால்கள் உள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த ஏரி தற்போது காணாமலேயே போய்விட்டது.
இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. ஆனால் இந்த ஏரியை ரூ.15 லட்சம் செலவில் தூர்வாரியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன ஏரியை கண்டு பிடித்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கண்ணும் கண்ணும் என்ற படத்தில் நடிகர் வடிவேலு கிணத்த காணும்... கிணத்த காணும்... என அலறிய படி போலீஸ் நிலையத்திற்கு வந்து மனு கொடுக்கும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் ஏரியை காணவில்லை என கூறி விவசாயிகள் மனு கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.