கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2014- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலைப் பணி துவங்கிய பின்பு முடிவடைய வேண்டிய காலத்திற்குள் எவ்வித பணியும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டன.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வந்தனர். பாதியில் கட்டப்பட்ட பாலங்கள், பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், முழுமையடையாத தார் சாலைகளினால், விபத்துக்குள்ளாகி சுமார் 20- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வந்த நிலையில் பா.ம.க சார்பில் இன்று (10/03/2020) நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. சு.கீணணூர் மற்றும் மஞ்சக்கொல்லை ஆகிய 2 இடங்களில் மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இப்போராட்டங்களில் பா.ம.கவை சேர்ந்த பெண்கள் நாற்றுகள் நட்டு, கண்டன முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் ஒரு மாதத்திற்குள் சாலைப் பணியை முடிக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்று சேர்ந்து மாபெரும் சாலை மறியலில் ஈடுபடபோவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட இளைஞர் சங்க துனை தலைவர் லக்ஷ்மணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் கலைமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.