அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து குடும்ப அட்டை நகலை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு, தெரு மின் விளக்கு, வடிகால் வசதி, பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக கோரியும் செய்து தரப்படவில்லை. அதிலும் பிரதான கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி, பலமுறை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், வாழ்வதற்கு எவ்வித வசதியும் செய்து தராத, தமிழக அரசை கண்டிக்கின்ற விதத்தில், தமிழக அரசு கொடுத்த குடும்ப அட்டை மட்டும் எதற்கு? என்று முதல் கட்டமாக, குடும்ப அட்டை நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் ஓட்டு கேட்பதற்கு மட்டும் வரும் அரசியல்வாதிகள், தங்களின் வாழ்வாதரத்தை, பாதுகாக்க வரவில்லை என்றும், அடிப்படை வசதி செய்து தராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் ஓட்டு கேட்க வர கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் வேதனையுடன் கலைந்து சென்றனர்.