சிவகங்கையில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளை, தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட, தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட சாதிகளை இனி தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட, மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும், ஏழு உட்பிரிவினரின் சமூகப் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, இப்பிரிவினர் தொடர்ந்து பட்டியல் இனத்தில் இருக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது” என்று பேசினார்.
முதல்வர் எடப்பாடியின் இந்த அறிவிப்புக்குப் பதிலடியாக, விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் அவருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டு, அவரது உருவபொம்மையை எரித்த வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர், 28 பேர் கைது செய்யப்பட்டு, பகளம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ‘எடப்பாடியார் வாழ்க! ஓ.பி.எஸ் வாழ்க! மாவீரன் கே.டி.ஆர். வாழ்க! தி.மு.க குண்டர்களைக் கைது செய்..’ என்று கோஷம் எழுப்பி, அ.தி.மு.க பிரமுகர்கள் நயினார் முகமது, கண்ணன், தர்மலிங்கம், சாந்தி மாரியப்பன், கோகுலம் தங்கராஜ், கதிரவன் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், ஆவேசமாகப் பகளம் திருமண மண்டபத்துக்குச் சென்று முற்றுகையிட்டனர். அந்த மண்டபம் மீது கல்வீசித் தாக்கிவிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிய அவர்கள், ‘கொடும்பாவி எரித்தவர்களை ரிமாண்ட் செய்ய வேண்டும்..’ என்று வலியுறுத்தி, அந்த மண்டபம் முன்பாக சாலையில் அமர்ந்தனர்.
இதுபோன்ற போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்யும் காவல்துறையினர், மண்டபத்தில் வைத்திருந்து, மாலையில் விடுவித்து விடுவது வழக்கம். ஆனால், எரிக்கப்பட்டது முதல்வரின் உருவபொம்மை என்பதாலும், எரித்தவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் கண்முன்னே ஆளும்கட்சியினர் வன்முறையில் இறங்கியதாலும், பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டவர்களை, ஆயுதப்படை மைதானத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அந்த மண்டபத்தில் தங்களை நெட்டித் தள்ளியது ஆளும்கட்சியினர் என்பதால், காவல்துறையினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
“இதற்குமுன், எத்தனையோ உருவபொம்மை எரிப்பு சம்பவங்கள் அதிமுகவினராலேயே நடத்தப்பட்டுள்ளது. அதற்கெல்லாம், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இந்த அளவுக்கு ‘ரியாக்ட்’ பண்ணியதில்லை. ‘நடப்பது அதிமுக ஆட்சி... சட்டம் தன் கடமையைச் செய்யும்..’ என்ற நம்பிக்கை ஆளும்கட்சியினருக்கு ஏன் இல்லாமல் போனது? காவல்துறையினரின் ஆசியோடு, கல்லெறிதல் போன்ற வன்முறையை விருதுநகர் மாவட்டத்தில் ஆளும்கட்சியினரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால், நிச்சயம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்காது” என்று திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சாதிகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஆளும்கட்சியினர் வன்முறையைக் கையிலெடுத்திருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல!