
கஜா புயலின் கோரதாண்டவத்தில் திமுக தலைவர் கலைஞரின் வீடும் ஊரும், சொந்த மாவட்டமும் தப்பவில்லை. கலைஞரின் வீட்டின் மீது கூட மரங்கள் சாய்ந்தன.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல் ஆளாக வந்து பார்த்து ஆறுதல் கூறியதோடு 4 கோடிக்கான நிவாரணபொருளையும் அனுப்பியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதோடு கட்சியின் தொண்டர்களையும் மீட்புபணியில் ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கலைஞர் மறைவிற்கு பிறகு திருவாரூர் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும், மக்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறி படை சூழ வந்து அரங்க கூட்டமும் நடத்தினார் மு.க.அழகிரி.
தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டதும் சைலண்ட் ஆனவர், தற்போது வரை எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று கூட தெரியவில்லை.

இதுவரை யாரும் கண்டிராத, வரலாறு காணாத புயலால் சிக்கி சின்னாபின்னமான திருவாரூர் மாவட்டத்தின் மக்களையோ, அவரது தந்தையும் திமுக தலைவரின் சொந்த மாவட்டமான நாகை மாவட்டத்தின் மக்களையோ சந்திக்காமலும், எந்த அறிவிப்பும் கொடுக்காமலும், எந்தவித உதவியும் செய்யாமலும் இருக்கிறார் என அவரது ஆதரவாளர்களே புலம்ப ஆரம்பித்துவிட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாதவர் எப்படி எங்கள் நலனில் அக்கரை காட்டுவார் என அழகிரிக்கு எதிராக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது.
இது குறித்து அழகிரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘’ இது தான் சரியான நேரம், அவர் அரசியல் செய்வதற்கும், நாங்கள் மக்களை சந்திப்பதற்கும், மக்கள் கடுமையாக அல்லல் படும் இந்த நேரத்தில் அவரின் உதவி பெரிதாக இருந்தால், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் எந்தவித தகவலும் இதுவரை இல்லை, நாங்களும் இரண்டுமுறை கூறிவிட்டோம். சைலண்டாகவே இருக்கிறார். ஆனால் பெரிய அளவில் உதவிகள் செய்ய இருக்கிறார் என்கிற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. அது காலா காலத்தில் நடக்கனும்ல..’’ என்கிறார்கள்.