கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு சமூக பெண்களுக்கு எதிரான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை உருவாக்கி உள்ளது.
இந்த ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை, பொன்னமராவதி, உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்தன. மற்றொரு பக்கம் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடக்கமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு போராட்டம் நடந்தது.
இந்தநிலையில் அந்த ஒரு ஆடியோ வெளியிட்ட நபர்களை பிடிக்கும் முயற்சியில் புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட போலிசார் இணைந்து பல்வேறு வகையிலும் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல வாட்ஸ் நிறுவனத்தின் உதவியையும் நாடியுள்ளனர். இன்னொரு பக்கம் ஆடியோ வெளியிட்டவர் என்று சிலரது பெயர்களையும், படங்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சைசாமி என்கிற அய்யாசாமி என்பவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் 19 ந் தேதி இரவு 9 மணிக்கு ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குகன், மற்றும் மாரிமுத்து ஆகியோர் சமூகவலைதளங்களில் வெளியான ஆடியோ சம்மந்தமாக என்னை சம்மந்தப்படுத்தி பதிவுகள் வெளியிட்டுள்ளனர். எனக்கும் அந்த ஆடியோவிற்கும் சம்மந்தம் இல்லை. அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
அதன் பிறகு கொத்தமங்கலம் குகனை போலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை முடிவில் கைது செய்து அய்யாச்சாமி பெயரையும், படத்தையும் வைத்து வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். மாரிமுத்து விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அய்யாச்சாமியிடம் கேட்டோம்.. அவர் நம்மிடம்.. நான் சார்ந்துள்ள சமூகத்தின் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ பற்றி தகவல்கள் பரவி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் என் படத்தை தவறாக பயன்படுத்தி அந்த ஆடியோவை நான்வெளியிட்டதாக குகன் மற்றும் மாரிமுத்து வாட்ஸ் அப், மற்றும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். அதை பார்த்தும் என்னிடம் பலர் கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் என்னை கலங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் குகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது போன்ற வதந்திகளை அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பதிவகளால் பிரச்சனைகள் தான் வரும் என்றார்.
மேலும் குறிப்பிட்ட ஆடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டவர்களை போலிசார் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஆடியோவை பகிர்ந்தவர்கள் என்று பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலரிடம் சில நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் பதிலில் தான் ஆடியோ வெளியிட்ட உண்மை குற்றவாளியை கைது செய்யமுடியும். அதுவரை வதந்திகளே பரவி வருகிறது.