மாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், சிசிடிவி காட்சிகளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 23 ஆம் தேதி சென்னையில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் அபாயகரமாக பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் மாணவன் ஒருவன் காலணியை ஸ்கேட்டிங் வீல் போல் பயன்படுத்தி மிகவும் அபாயகரமான முறையில் நடந்துகொண்ட அந்த வீடியோ கட்சி அதிர்ச்சியை கிளப்பியிருந்தது. எத்தனையோ முறை போலீசார் எச்சரித்தும், விழிப்புணர்வுகளை வழங்கியும், குறிப்பாக சென்னை போன்ற போக்குவரத்து கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரின் கண்டனத்தையும் பெற்றது. மறுபுறம் பள்ளி நேரங்களில் அதிகப்படியான பேருந்துகளை இயக்காததே இதற்கு காரணம் என ஒரு சாரார் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணையில் இந்த சம்பவம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் பயணித்தபோது நிகழ்ந்தது தெரியவந்தது. குறிப்பாக ஸ்கேட்டிங் செய்வது போன்று ஆபத்தாக பயணம் செய்த 11 ஆம் வகுப்பு மாணவனை கண்டறிந்து அவனை எல்லீஸில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்ந்துள்ளனர் போலீசார்.