Skip to main content

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிபந்தனைகளைத் தளர்த்தி அறிவிக்க வாய்ப்பு உள்ளதா?- உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

vinayagar chaturthi tamilnadu government chennai high court

 

மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு,விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, ஏதேனும் தளர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து, அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,  ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளைக் கடலில் கரைக்கவும் தடை விதித்து,  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தடை  உத்தரவை எதிர்த்து,  திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளதாலும், மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதால், இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணிடம் கேள்வி எழுப்பினார்.

 

மேலும் நீதிபதிகள், கரோனா தொற்று  சூழல் குறித்து நாங்கள்  நன்கு அறிந்துள்ளோம்.  பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது  என்பதில் மாற்று கருத்தில்லை.  சிலையை வைத்து வழிபட்ட பின்,  5 அல்லது  6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அதனைப் பெரிய கோவில்கள் அருகில் கொண்டு வந்து  வைத்து விடுவது அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா? சிலைகளைத் தயாரித்துள்ளவர்களும் இதனால் பாதிக்கப்படுவர். அவர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் கூறியதை அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்