விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரம் போலீசார் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடக்கூடிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அந்தந்த மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல்கள் இசைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை வைக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி; சமூகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பாடல்களோ பேச்சுகளோ இடம்பெறக்கூடாது. விளம்பரப் பலகைகள் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. கட்டுப்பாட்டு வழிமுறைகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்படும் இடத்தின் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையிலும் அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத்துறையிடம் தடையில்லாச் சான்று பெறுவதோடு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலை வைப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளை ஏற்பதாக உறுதி அளிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.